பெண்ணின் பித்தப்பையிலிருந்து 1000 கற்கள் அகற்றி மருத்துவர்கள் சாதனை!
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் 30 வயது பெண்ணின் பித்தப்பையிலிருந்து சுமார் 1000 கற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புணேவில் வசித்துவந்த பெண் ஒருவர் கர்ப்பம் தரித்த நிலையில், கடந்த சில மாதங்களாகக் கடுமையான வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். பின்னர், அவரது பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பித்தப்பையை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
குழந்தையை பிரசுவிக்க சில மாதங்களே உள்ள நிலையில் பித்தப்பை அகற்றும் செய்யும் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்த சில மாதங்களில் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்பிறகு, 30 வயது பெண்ணுக்கு 20 நிமிட லேப்ராஸ்கோபிக் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பெண்ணின் பித்தப்பையிலிருந்து 1000 கற்களை மருத்துவர்கள் அகற்றினர். கற்கள் ஒவ்வொன்றும் 1 முதல் 2 மிமீ வரை பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அதிகப்படியான கொழுப்பு காரணமாகவும் பித்தப்பையில் கற்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது கற்கள் அகற்றப்பட்டு பெண் நலமுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.