நாட்டை அபிவிருத்தி செய்ய அரச உத்தியோகத்தர்களின் பணி இன்றியமையாதது..
திட்டமிட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய அரச சேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான சேவை இன்றியமையாயதது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
துரித அபிவிருத்தியின்பால் நாட்டை கொண்டு செல்ல அரச சேவை உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற உறுதிபூண வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சி செயலமர்வின் அங்குரார்பண நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,அதிமேதகு ஜனாதிபதியின் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய திருகோணமலை மாவட்டத்தில் 1171 பட்டதாரிகள் பயிற்சிக்காக 11 பிரதேச செயலகப்பிரிவுலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.பல்கலைக்கழகங்களில் உள்வாரியாக அல்லது வெளிவாரியாக மூன்று , நான்கு வருடங்கள் கல்வியை பூர்த்தி செய்து சிலர் வேலையின்றி வேலையொன்றை பெற காத்திருந்தும் இருந்திருக்கலாம்.அவ்வகையில் அரசாங்கம் தங்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி நிரந்தர நியமனங்களை வழங்கவுள்ளது. சம்பிரதாயபூர்வ அரச துறையை விட நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச்செய்யும் வகையில் அரசதுறையின் வினைத்திறனை மேம்படுத்த பல கொள்கைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.அதற்கேற்ப உயரிய அர்ப்பணிப்புடனான சேவையை வழங்கும் வகையில் ஆற்றல் மற்றும் திறன்களை தாங்கள் வளர்த்துக்கொள்வது அவசியமானது.
புத்தாக்கம் , குழுச்செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனான கடமையுணர்வு மூலம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கமுடியும். தொழில் பாதுகாப்பு,ஓய்வூதியம்,சுதந்திரம் போன்றன அரசதுறையில் காணப்படுகின்றது என்ற நம்பிக்கை காரணமாக அதிகமானோர் தனியார் துறையை நாடுவதில்லை என்றும் குறித்த சிந்தனையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைப்பாடு அவசியம் வேண்டும்.தனியார் துறையிலும் தொழில் உத்தரவாதத்தை பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
மக்களது வரிப்பணத்தில் ஊதியம்
பெறும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தமது கடமையை திருப்தியுடன் மக்களது தேவைப்பாடுகளை இனங்கண்டு உரிய உபாயங்களை கையாண்டு நிவர்த்திக்க முற்படல் வேண்டும். பயிற்சியின் பின்னர் ஒவ்வொருவரது கல்வி மட்டம் ,விருப்பு,நிறுவன தேவைப்பாடு மற்றும் நிரந்தர வதிவிடம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு நிரந்தர நியமனம் வழங்கப்படலாம்.இவை நான்கு விடயங்களும் சில சமயங்களில் அனேகருக்கு ஒரே சமயம் பொருந்தாததாக காணப்படினும் வழங்கப்பட்ட நியமனத்தை ஏற்று கடமையாற்றுவது அவசியம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
ஐந்து குழுவாக பட்டதாரி பயிலுனர்கள் வகைப்படுத்தப்பட்டு ஐந்து தலைப்புக்களில் பயிற்சி நெறிகள் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தலைமைத்துவ பயிற்சி மங்கி பிரிட்ச் இராணுவ முகாமிலும்,அரச சேவை பயிற்சி திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்திலும் அதேபோன்று மூதூர் பிரதேச செயலகத்திலும் , முகாமைத்துவ பயிற்சி நெறி மாவட்ட செயலகத்திலும்,தனியார் துறை பயிற்சி தெரிவுசெய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எம்.ஏ.அனஸ்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன்,பிரதேச செயலாளர்கள், சக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.