10 மீ உயரத்திலிருந்து நிலவில் வேகமாக தொப்பென வீழவுள்ள விக்ரம்!
நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா 25 எனும் விண்கலம் நிலவில் மோதியதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் 10 மீட்டர் உயரத்திலிருந்து தொப்பென குதித்து தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நிலவில் இருக்கும் வளங்களையும், நிலவின் பகுதிகளையும் யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கும் நீர்தான். அமெரிக்காவின் நாசாவே இதை கண்டுபிடிக்க தவறிய நிலையில் இஸ்ரோவின் சந்திரயான்-1 விண்கலம் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்து சொன்னது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.
ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் 113×157 கி.மீ என்கிற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டர் மேலும் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு இது நிலவில் மெல்ல தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால் தரையிறங்குவதற்கு முன்னாள் விக்ரம் லேண்டர் சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்து நிலவில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது விக்ரம் லேண்டர் தரையிறங்கும் செயல்பாடு மிகவும் சிக்கலானது. மொத்தம் 8 கட்டங்களாக இந்த செயல்பாடுகள் நடைபெற இருக்கிறது.
முதலில் 25 கி.மீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கி.மீ உயரத்திற்கு கொண்டுவர வேண்டும். தற்போது விக்ரம் லேண்டர் மணிக்கு 6,000 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதனை 1,200 கி.மீ வேகத்திற்கு குறைத்தால்தான் உயரத்தையும் குறைக்க முடியும். இதற்காக விக்ரம் லேண்டர் 10 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். இரண்டாம் கட்டமாக நிலவுக்கும் லேண்டருக்கும் இடையே இருக்கும் 7.4 கி.மீ தூரம் 6.3 கி.மீ ஆக குறைக்கப்படும். இந்த கட்டத்தில்தான் லேண்டர் எந்த திசையில் தரையிறங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
மூன்றாவது கட்டத்தில் லேண்டரின் வேகம் 1,200 கி.மீலிருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இதன் மூலம் 6.4 கி.மீ தூரத்திலிருந்து நிலவுக்கு செங்குத்தாக வெறும் 800 மீ உயரத்திற்கு விக்ரம் லேண்டர் கொண்டுவரப்படும். பின்னர் 4 மற்றும் 5வது கட்டத்தில் லேண்டரின் சிறிய ராக்கெட்டுகள் செயல்பட தொடங்கி லேண்டரை கொஞ்சம் கொஞ்சமாக 150 மீ மற்றும் 60 மீ உயரத்திற்கு கொண்டு வரும்.
இதில் 6வது கட்டம் மிகவும் முக்கியமானதாகும். இந்த கட்டத்தில்தான் விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஒளி கருவி, நிலவின் மீது லேசர் ஒளியை வீசி அதன் மூலம் நிலவுக்கும் லேண்டருக்கும் இடையேயான தூரம் எவ்வளவு என்பதை உணர்ந்து ராக்கெட் வெளியிடும் உந்து விசையை குறைக்கவோ கூட்டவே செய்யும். இப்படியாக படிப்படியாக 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டர் வந்து சேர்ந்தவுடன் ராக்கெட் பூஸ்டர்கள் அனைத்தும் ஆஃப் ஆகிவிடும்.
ஏனெனில் நிலவின் மண் துகள்கள் மிக மிக நுண்ணியது. 10 மீட்டர் உயரத்தை தாண்டியும் பூஸ்டரை செயல்படுத்தினால் இந்த மண் துகள்கள் பறந்து வந்து லேண்டர் மீது படிந்துவிடும். இது ஏதாவது தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே லேண்டர் 10 மீ உயரத்தில் இருக்கும்போதே பூஸ்டர்கள் ஆஃப் செய்யப்பட்டு அது தொப்தென விழுந்துவிடும். நிலவின் ஈர்ப்பு விசையை பொறுத்த அளவில் விக்ரம் லேண்டர் நிமிடத்திற்கு 2 மீட்டர் வேகத்தில் நிலவில் விழும்.
கடந்த முறையும் 13 மீட்டர் உயரத்திலிருந்து சந்திரயான் 2 விண்கலம் நிலவில் மோதியதால்தான் செயலிழந்தது. ஆனால் இந்த முறை இப்படி மோதினாலும் கூட லேண்டருக்கு எதுவும் ஆகாததை போல அதை சிறப்பாக இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆக இது விக்ரம் லேண்டர் நிலவில் தொப்பென விழ வைப்பது திட்டமிட்ட செயல்பாடுதான். இதனால் எழும் தூசிகள் அடங்க சில மணி நேரங்கள் ஆகலாம். அதன் பின்னர்தான் பிரக்யான் ரோவர் வெளியே வரும் என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். ஏனெனில் அதற்கு முன்னர் ரோவர் வெளியில் வந்தால், ரோவர் மேல் உள்ள சூரிய ஒளி தகடுகள் மேல் தூசிகள் பதிந்துவிடும்.
கடந்த முறையும் 13 மீட்டர் உயரத்திலிருந்து சந்திரயான் 2 விண்கலம் நிலவில் மோதியதால்தான் செயலிழந்தது. ஆனால் இந்த முறை இப்படி மோதினாலும் கூட லேண்டருக்கு எதுவும் ஆகாததை போல அதை சிறப்பாக இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆக இது விக்ரம் லேண்டர் நிலவில் தொப்பென விழ வைப்பது திட்டமிட்ட செயல்பாடுதான். இதனால் எழும் தூசிகள் அடங்க சில மணி நேரங்கள் ஆகலாம். அதன் பின்னர்தான் பிரக்யான் ரோவர் வெளியே வரும் என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். ஏனெனில் அதற்கு முன்னர் ரோவர் வெளியில் வந்தால், ரோவர் மேல் உள்ள சூரிய ஒளி தகடுகள் மேல் தூசிகள் பதிந்துவிடும்.
இதனால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. பிரக்யான் ரோவர் முழுக்க முழுக்க சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரத்தில்தான் இயங்கும். எனவேதான் லேண்டர் தரையிறங்கினாலும், ரோவர் வெளிவர சிறிது நேரம் ஆகும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.