யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழ்நாடு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிப் படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு என்னுடைய நன்றி.” என்றார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன்? என நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், “வயது குறைவானவர்களாக இருந்தாலும், யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு அடிப்படையில் மட்டுமே நான் சந்தித்து பேசினேன்.” என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “அரசியல் வேண்டாம்.” என்று அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த்தை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்த யோகி ஆதித்யநாத்தை கண்ட காரில் இருந்து கீழே வேகமாக இறங்கிய ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள். தன்னை விட வயது குறைந்தவரின் காலி விழுந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதில் அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த் வேறொரு காரணத்தை கூறியுள்ளார்.