லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரலையில் எப்போது கிடைக்கும்?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், அன்றைய தினம் மாலை 5.20 மணியில் இருந்து இஸ்ரோ நேரலை தகவல்களை வழங்கவுள்ளது. நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வை மேற்கொள்ள கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், அடுத்தடுத்த சுற்றுப் பயண பாதை மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக, குறைந்தபட்ச சுற்று வட்டப்பாதை 25 கிலோ மீட்டராக அண்மையில் குறைக்கப்பட்டு, நிலவை நெருங்கியுள்ளது விக்ரம் லேண்டர். மேலும், நிலவில் எந்த பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது என்பதை ஆராய பொருத்தப்பட்ட அதிநவீன கேமிரா, கடந்த 19ஆம் தேதி புதிய புகைப்படங்களை எடுத்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 15 ஆம் தேதி லேண்டர் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறியும் LPD கேமரா எடுத்த புகைப்படங்களையும் கடந்த 17 ஆம் தேதி உந்துவிசை கருவியில் இருந்து பிரிந்த போது லேண்டர் கேமரா எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நேரடி நிகழ்வு :
நிலவில் லேண்டர் இறங்கும் காட்சி 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் இஸ்ரோவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகே பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கும் என்றும் விஞ்ஞானி நெல்லை முத்து கூறியுள்ளார். சந்திரயான் -2 திட்டத்தில் இருந்த பிழைகளை நிவர்த்தி செய்து, தரவுகள் சரியாக ஆராயப்பட்டுள்ளதாகவும், அதனால் சந்திரயான்-3 திட்டம் நிச்சயம் வெற்றி அடையும் என்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்பிட்டர் இல்லாமல் அனுப்பபட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், ஏற்கனவே நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 2 ஆர்பிட்டருடன் இருவழி தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் லேண்டர் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் இனி சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலமாகவே இஸ்ரோவுக்கு கிடைக்கும். அதாவது ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களை சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தகவல் மையத்திற்கு விக்ரம் லேண்டர் அனுப்பி வைக்கவுள்ளது. கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் ஒளிபரப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.