ரத்வத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய் – நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் போராட்டம்
மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலையக எம்.பிக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் உள்ளிட்டோர் இணைந்து சபைக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியினரும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.
அதேவேளை, குறித்த தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் இன்று உரையாற்றும்போது வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய வடிவேல் சுரேஷ் எம்.பி.,
“மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் உதவி முகாமையாளர் ஒருவரால் வீடொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கதறி அழுதனர். சமைத்து உணவுகூட வீசப்பட்டுள்ளது. இது மிகவும் கொடூரமாகும். அவர் உடன் கைது செய்யப்பட வேணடும்.” – என்று வலியுறுத்தினார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனும் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
அதன்பின்னர் மலையக எம்.பிக்கள், கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இணைந்து சபைக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.