ரயில்வே கட்டுமான பணியின்போது விபத்து…17 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
மிசோரம் மாநிலத்தில் ரயில்வே கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளளார்.
மிசோரம் மாநிலம் Aizwal நகரில் இருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் சாய்ரங் என்ற பகுதி உள்ளது. இங்கு ரயில்வே தண்டவாளம் மற்றும் பாலத்தை இணைக்கும் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. இன்று (ஆக.23) காலை 10 மணியளவில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இரண்டு தூண்களுக்கு மத்தியில் பாலம் இணைப்பு நடைபெற்றது. இந்த பணிகளின்போது 35 முதல் 40 பணியாளர்கள் வரை களத்தில் இருந்தனர்.
அப்போது கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் உடைந்து கீழே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பாலம் விழுந்ததால் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மிசோரம் விபத்தில் பணியாளர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் அலுவலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மீட்புப்பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்து வருவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.