உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்! – ஆணைக்குழுவிடம் மொட்டு வலியுறுத்து.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள் 30 பேர் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தினர்.
தேர்தல் நடத்தப்படாமையால் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யுமாறு அரசு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோருவதற்கும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருக்கின்றது எனவும் அறியமுடிகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வழமையான சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது எனவும், அதனால் அந்தப் பிரதேசங்களில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.