வாக்னர் குழுத் தலைவர் பிரிகோஷினின் சாவும் , ரஷ்ய தலைவர் புடினின் மௌனமும்
ரஷ்யாவின் கூலிப்படை ஆயுதக் குழுவான வாக்னர் குழுவின் தலைவரான பிரிகோஷின் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மாஸ்கோவிற்கு வாக்னர் குழுமத் தலைவர் பிரிகோஷினுக்கு சொந்தமான தனியார் ஜெட் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் ஜெட் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் வாக்னரின் குழுத் தலைவரான பிரிகோஷின் மற்றும் அவரது இரண்டாவது தளபதி டிமிட்ரி உட்கின் ஆகியோர் அடங்குவர்.
வாக்னர் குழு என்பது ரஷ்யா மற்றும் சர்வதேச போர்களில் ரஷ்யாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி புடினால் கட்டப்பட்ட ஒரு ஆயுதக் குழுவாகும்.
மேலும் அதன் தலைவர் பிரிகோஷின் ஒரு காலத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருந்தார், உக்ரைன் போரின் ஆரம்பதில் ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து அவரது குழுவும் போராடினர்.
வாக்னர் குழு உறுப்பினர்களுக்கும் ரஷ்யப் படைகளுக்கும் இடையே சில விரிசல்கள் ஏற்பட்டதால், இந்த ஆண்டு ஜூன் 24 அன்று, வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் பிரிகோஷின் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளியேறிய பிறகு, ரஷ்யாவின் இராணுவத் தலைமையகமான ரோஸ்டோவுக்குள் நுழைந்தனர்.
வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனில் சண்டையிட்டதை நிறுத்திவிட்டு , ரஷ்யப் படைகளுக்கு எதிராக திரும்பி இராணுவ தலைமையகம் அமைந்திருந்த ரொஷ்டொவ் நகரத்துக்குள் புகுந்து தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியது.
அங்கிருந்து ரசிய படையினருக்கு எதிராகப் போரை அறிவித்த பிறகு, அவர்கள் ஒரு பெரிய குழு கவச வாகனங்களுடன் மாஸ்கோவை நோக்கி நகரத் தொடங்கினர், அதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவும் மாஸ்கோ மற்றும் சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கு படைகளை வரவழைத்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது.
இப்படி பதட்டமான சூழ்நிலை நிலவிய நிலையில்,பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஜனாதிபதி புதினுடனும் , வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஷினுடனும் கலந்துரையாடியதன் பின் , இரு தரப்புக்கும் இடையே ஒரு உடன்பாட்டை எட்டினார். அதன்பின் வாக்னர் குழு உறுப்பினர்கள் சண்டையை நிறுத்தியதாக அறிவித்தனர்.
பெலாரஸ் நாட்டின் தலைவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பெரும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யா அறிவித்தது. கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் உறுப்பினர்கள் மீது ரசியா வழக்குத் தொடராது, அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
சண்டையை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிய பெலாரஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு ரஷ்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் நன்றி தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இறுதியில், கிளர்ச்சிக்கு சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வாக்னர் குழுவின் தலைவரான பிரிகோஷின் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மர்மமான முறையில் விண்ணில் வைத்து உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது.
இதுவரை எவருமே விபத்து குறித்து பகிரங்கமாக அறிவிக்காத போதும் , விமானத்தில் ஏற்றப்பட்ட வைன் மதுபான பெட்டிக்குள் இருந்த ஒரு குண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகங்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இரண்டு முறை வெடித்த நிலையை அவதானித்தவர்கள் சொல்கிறார்கள். அதாவது இருமுறை விமானம் சுடப்பட்டதா அல்லது உள்ளே வெடித்ததா எனும் சந்தேகமும் இருக்கிறது.
ரஷ்ய மூத்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின் விமானப்படைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அதே நாளில் இந்த விமான விபத்து நடந்துள்ளது.
ஜெனரல் சுரோவிகின், ப்ரிகோஜினுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. ப்ரிகோஜின் , ரசியாவுக்கு எதிராக நடத்திய கலகத்திற்குப் பிறகு ஜெனரல் சுரோவிகினை பொதுவெளியில் காணக் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 7 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் புறப்பட்டிருந்தது.
மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் இடையில் உள்ள குசென்கினோ என்ற கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருக்கும் போதே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளாகும் முன் கிராம மக்கள் இரண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும், இரண்டு புகை மூட்டங்களைக் கண்டதாகவும் கிரே சோன் சேனல் கூறியுள்ளது.
Tass செய்தி நிறுவனம், Prigozhin’s Embraer Legacy விபத்துக்குள்ளானபோது தீப்பிடித்ததாகக் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்டு அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரமே வானில் இருந்ததாக செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
வாக்னர் குழுமத்தின் மூத்த தளபதி டிமிட்ரி உட்கினும் பயணிகள் பட்டியலில் இருப்பதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இச் சம்பவத்தின் பின் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுவரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார்.
நேற்றிரவு (23), தாக்கப்பட்ட எம்ப்ரேயர் ஜெட் விமானத்தில் ப்ரிகோஜின் இருந்ததாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே, புடின் , குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த ஒரு புகழ்பெற்ற இரண்டாம் உலகப் போரின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
நிகழ்வின் போது, ’சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்று அழைக்கப்படும் உக்ரைன் போரின் போது கொல்லப்பட்ட ரஷ்யர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
ஆச்சரியப்படத்தக்க வகையில், வாக்னர் அல்லது யெவ்ஜெனி பிரிகோஜின் பற்றி எதுவும் அவர் பேசாது மௌனம் காத்தார்.
விமான விபத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும்வரை புடின் காத்திருக்கிறாரா?
– ஜீவன்