ஹிமாசலில் கனமழை: 8 கட்டடங்கள் இடிந்து விபத்து!
ஹிமாசலில் பெய்த கனமழையால் குல்லு மாவட்டத்தில் எட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஆனால், எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குல்லு மாவட்டத்தின் அன்னி பகுதிகள் கட்டடங்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் 5 நாள்களுக்கு முன்பே விரிசல் ஏற்பட்டது. கட்டடங்கள் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அங்கிருந்தவர்கள் காலி செய்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அந்த கட்டடங்கள் இன்று இடிந்து விழுந்துள்ளது.
சேத மதிப்பீடு செய்யப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய நெடுஞ்சாலை305யில் உள்ள வேறு சில பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசிப்பவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஜூன் 24-ம் தேதி பருவ மழை தொடங்கியதிலிருந்து மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 238 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். கனமழையால் மாநிலத்திற்கு இதுவரை ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.