மன்னார் துப்பாக்கிச்சூடு: கடந்த வருட இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கும் சம்பவமா?

மன்னார், அடம்பன் – முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த இருவரும் சாவடைந்துள்ளனர்.
மன்னார், நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது 43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது 56) ஆகிய இரண்டு குடும்பஸ்தர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர்.
இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை, கடந்த வருடம் மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
பழிக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.