சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதலமைச்சர் ஆவேசம்

தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்காக தி காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files) திரைப்படத்துக்கு நர்கிஸ் தத் விருது (Nargis Dutt) அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”69 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்.
மேலும், இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஷ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” எனக் கூறியுள்ளார்.