11 பேரை கொன்று விட்டு இந்தியாவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 3 குற்றவாளிகள் பெங்களூரில் கைது!
11 கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 03 இலங்கைக் குற்றவாளிகளும், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த அவர்களுக்கு உதவி மற்றும் தங்குமிடம் வழங்கிய இந்தியர் ஒருவரும் இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (23) பெங்களூர் யெலஹங்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. .
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் பேரில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டு, அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதை உறுதிசெய்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
புலிகளுடன் தொடர்புடைய மூன்று பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஊடகங்கள் முதலில் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் தமிழ் பேச முடியாத இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கம்பஹா, கடுவெல, கொழும்பு பகுதிகளில் வசிக்கும் மூன்று இலங்கை குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.
கம்பஹாவைச் சேர்ந்த கசுன் குமார சங்க, கடுவெலயைச் சேர்ந்த அமில நுவன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ரங்க பிரசாத் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுக்குட்பட்ட இந்த மூவரில் அமில நுவன் மீது 5 கொலை வழக்குகளும், கசுன் குமார சங்க மீது 4 கொலை வழக்குகளும், கொழும்பு பகுதியை சேர்ந்த ரங்கபிரசாத் மீது 2 கொலை வழக்குகளும் உள்ளதாக இந்திய மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீன்பிடி படகில் ராமேஸ்வரம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்த குற்றவாளிகள் தரைவழியாக பெங்களூர் சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் இப்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள 42 வயதான ஜெய் பரமேஷ் என்பவரால் நகரில் ஒரு வாடகை குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள் உட்பட 53 பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மூவருக்கு அடைக்கலம் கொடுத்த ஜெய் பரமேஷும் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது மற்றும் குற்றச் சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும் யெலஹங்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராமேஸ்வரம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்த மூன்று இலங்கையர்களும் இலங்கையின் தேடப்படும் குற்றவாளிகள் என இணை பொலிஸ் ஆணையாளர் (குற்றம்) எஸ்.டி.சரணப்பா தெரிவித்துள்ளார்.