வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகளின் சவாலுக்கு நாடாளுமன்றத்தில்தான் பதிலளிப்பேன்! – சரத் வீரசேகர கூறுகின்றார்.

“முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சட்டத்தரணிகள் எனக்கு விடுத்துள்ள சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன்.”
இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.
முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக சரத் வீரசேகர எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து தத்தமது நீதிமன்றங்கள் முன்பாக அடையாளக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள், “சரத் வீரசேகர எம்.பி. நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியம் இருந்தால் வெளியில் வந்து கதைக்க வேண்டும்” – என்று சவால் விடுத்திருந்தனர்.
இந்தச் சவால் தொடர்பாகச் சரத் வீரசேகர எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்திருந்த கருத்துக்குத்தான் வடக்கு – கிழக்கு சட்டத்தரணிகள் சவால் விடுத்துள்ளனர். எனவே, அவர்களின் சவாலுக்கு நான் நாடாளுமன்றத்தில் வைத்துத்தான் பதில் வழங்குவேன்” – என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.