ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கவே “13” தொடர்பில் பேச்சு! – சஜித் அணி குற்றச்சாட்டு.
“தற்போதைய ஆட்சியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டார்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனவும், சஜித் பிரேமதாஸவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஆட்சியின் கீழ் இவ்வாறு எதுவும் நடக்காது. சஜித்தைக் கைவிட்டுச் செல்வதற்கு நாம் தயாரில்லை. அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில நல்ல திட்டங்களை வரவேற்கின்றோம். அதற்காக அரசுக்கு ஆதரவு என அர்த்தப்படாது. எதிரணி பலமாகவுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பலமடையும்.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சியில்தான் தற்போதைய அரசு ஈடுபட்டுள்ளது. 13 பற்றி பேசப்படுவதும் இதன் ஓர் அங்கமாகும்.” – என்றார்.