அரிசி ஏற்றுமதியை மீண்டும் கட்டுப்படுத்தும் இந்தியா… புதிதாக இன்னொரு வரி விதிப்பு
இந்தியா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய முடிவால் ஏற்றுமதி அளவு பெருமளவு சரிவடையும் என்றே நம்பப்படுகிறது. கடந்த மாதம், பரவலாக நுகரப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து வாடிக்கையாளர்களை இந்தியா அதிர்ச்சியடையவைத்தது.
கடந்த ஆண்டு இதேப்போன்று குருணை அரிசி ஏற்றுமதிக்கும் இந்தியா தடை விதித்திருந்தது. குறித்த தடையானது வாடிக்கையாளர்களை அதிகமாக புழுங்கல் அரிசியை வாங்கி சேமிக்கும் நிலைக்கு தள்ளியது.
இதனால் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டது. தற்போது 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் தாய்லாந்து மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து வரும் சப்ளைகளைப் போல இந்தியப் புழுங்கல் அரிசி விலையும் அதிகமாகும்.
வாடிக்கையாளர்களுக்கு வேறு வழியிருப்பதாக தெரியவில்லை என மும்பையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2022ல் மட்டும் 7.4 மில்லியன் டன் புழுங்கல் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள ஏழை மக்கள் பொதுவாக விரும்பும் அனைத்து வகையான பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கும் இந்தியா தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.