எதிர்காலத்தின் எரிபொருள் இதுதான் – மத்திய அமைச்சர் சொன்ன பிளான்!
எதிர்காலத்தில் மக்கள் பயன்படுத்தப் போகும் எரிபொருள் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. முந்தைய காலத்தில் மக்கள் மரக் கட்டைகளை எரித்து சமைக்க பயன்படுத்தினர். பின்னர் நிலக்கரி, பெட்ரோலியம், மண்ணெண்ணெய் என இதன் வடிவம் மாறியது. தற்போது கியாஸ் சிலிண்டர்கள் எரிபொருளாக பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்காலத்தில் எரிபொருள் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது-20 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களின் எரிபொருள் தேர்வாக பசுமை ஹைட்ரஜன் வாயு இருக்கும். 2021-ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசும்போது, எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜன்தான் எரிபொருளாக இருக்கும் என்று கூறியிருந்தார். அவர் அப்போது பேசியபோது சிலர் விமர்சித்தார்கள்.
ஆனால் பிரதமர் சொன்னதுதான் உண்மை. நாடு மரக்கட்டைகளை எரித்துக் கொண்டிருந்தபோது எல்.பி.ஜி.க்கு நிலைமை மாறும் என்று சொல்லப்பட்டால் அதை விமர்சித்தார்கள். ஆனால் தற்போது பெரும்பாலானோர் எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தி வருகிறோம்.
முன்பு காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது, உஜ்ஜவாலா திட்டம் 9 கோடி காஸ் சிலிண்டர்களைக் கொடுத்தோம். எல்லோருக்கும் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை எளிதாக்கி வைத்தோம். கார்களைப் பொருத்தவரையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெட்ரோலை மெத்தனால் போன்ற எரிபொருளுடன் பயன்படுத்தும்போது, பெட்ரோலின் பயன்பாடு கணிசமாக குறையும்.
20 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்டிருந்தால் அதனால் வாகனங்களின் உதிரி பாகங்கள் பாதிக்கப்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.