நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்கள்! ஏரியில் மூழ்கி பலியான சோகம்

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரவிருக்கும் நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, போருர் அடுத்த அய்யப்பன்தாங்கல், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரிஷிகேஷ். விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர். அங்கு ஏரியின் 4 -வது மதகின் கீழே இறங்கி கால்களை நனைத்து விளையாடியுள்ளனர். அப்போது, திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர்.
அதை பார்த்த அவர்களது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் மீட்க முடியாமல் போனது. பின்னர், தகவலிருந்த பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏரியில் இருந்து இரு மாணவர்களின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், ரிஷிகேஷ் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஹரிஷ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு காத்திருந்தது தெரியவந்துள்ளது.
தற்போது, ஏரியை நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி பார்க்க வந்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.