இலங்கை அரச போக்குவரத்து சேவையின் தவிசாளர் மன்னார் விஜயம்.
இலங்கை அரச போக்குவரத்து சேவையின் தவிசாளர் திரு.கிங்ஸ்லி ரணவக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மன்னார் போக்குவரத்து பிரதான சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
வடமாகாண போக்குவரத்து சாலைகள் தொடர்பாக காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக மேற்படிவிஜயம் இடம் பெற்றிருந்ததது.
குறித்த விஜயத்தின் போது மன்னார் போக்குவரத்து சாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக மன்னார் போக்குவரத்து சாலை முகாமையாளரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக மன்னார் போக்குவரத்து சாலைக்கான பேரூந்துகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கான நிர்வாக தேவைகள் தொடர்பாகவும் தற்போது தற்காலிகமாக பணி புரியும் ஊழியர்களின் நிரந்தர நியமனம் வழங்குதல் தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மன்னார் சாலை முழுவதுமாக ஆராய்ந்த தவிசாளர் பழுதடைந்துள்ள நிலையில் காணப்படும் பேரூந்துகளை பயன்படுத்துவது தொடர்பாகவும் பேரூந்துகளுக்கான வர்ணம் பூசும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார்.
அதே நேரத்தில் மன்னார் நகரசபைக்கு சொந்தமான பேரூந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்குள் காணப்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக ஆளுனர் மற்றும் மெஜருடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
குறித்த களவிஜயத்தின் போது இலங்கை அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய பொறுப்பதிகாரி திரு.ராஜ கருணா மற்றும் இலங்கை அரச போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் திரு.அருணாஜித் சிங் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.