வருங்கால தலைமுறையினருக்காக சிங்கப்பூரை வளர்ப்பதே ஆக முக்கியம் – பிரதமர் லீ.
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் ஆகியவை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய சவால்கள்; எனினும், வருங்காலத் தலைமுறையினருக்காக பொருளியலை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் ஆக முக்கியமான பொறுப்பு என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
தெக் கீ சமூக மன்றத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் திரு லீ பேசினார்.
நாடு முன்னேறும்போது யாரும் பின்தங்காமல் பார்த்துக்கொள்ளும் நோக்கில் மூத்தோர் கவனித்துக்கொள்ளப்படுவர் என்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
“எனினும் வருங்காலத்தை மையமாகக்கொண்டு செயல்படுவதே நாம் ஆக முக்கியமாக செய்ய வேண்டியது.
“சிங்கப்பூரை முன்னேறச் செய்யவேண்டும், நமது சிறுவர்கள் நன்கு தயார்நிலையில் இருக்க வைக்கவேண்டும், நமது பொருளியல் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், சிங்கப்பூரின் தற்காப்பு வலுவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
“அதைத் தொடர்ந்து நம்மால் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல முடியும்,” என்றார் அங் மோ கியோ குழுத்தொகுதியில் அடங்கும் தெக் கீ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு லீ.
இவ்வாண்டின் தேசிய தினக் கூட்ட உரையில் திரு லீ, துடிப்பான முறையில் மூப்படைவதன் (ஏக்டிவ் ஏஜிங்) முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
அந்த வகையில் மூத்தோர் துடிப்புடன் ஆரோக்கியமாக இருக்கவும் சமூகத்துடன் தொடர்பில் இருக்கவும் உதவும் துடிப்பான மூப்படைதல் நிலையங்கள் அதிகரித்து வருவதை அவர் சுட்டினார்.
அவற்றில் வழங்கப்படும் சேவைகளும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.