பட்டதாரிகளுக்கான பயிற்சி நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் விசேட செயற்திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சி நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் அரச தாபன பயிற்சி ஆகிய பயிற்சி நெறிகள் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முகாமைத்துவ பயிற்சியானது யாழ்ப்பான பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் மாவட்டச்செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. அதேபோல் தனியார் தாபன பயிற்சிக்காக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் கிளிநொச்சி மாவட்ட தனியார் துறையினருடன் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
தலைமைத்துவ பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ முகாம்களில் தமது தலைமைத்துவ பயிற்சியினை பெற்றுவருகின்றனர்.
இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் பயிலுனர் நியமனம் பெற்ற 267 பட்டதாரிகளில் சேவைக்கு அறிக்கையிட்ட 250 பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் 21 நாட்கள் கட்டம் கட்டமாக நடைபெறவுள்ளன.
கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் மாவட்ட இராணுவத் தலைமையகமும் இணைந்து மேற்படி பயிற்சி நெறிகளினை ஒழுங்கமைத்து செயற்படுத்தி வருகின்றன.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு என்ற தொனிப் பொருளின் கீழ் தலைமைத்துவம் மற்றும் அணிச்செயற்பாடுகள் முகாமைத்துவப்பயிற்சி அரசதாபன பயிற்சி தனியார் தாபன பயிற்சி திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான பயிற்சிகளை பயிலுனர்கள் பெற்றுவருகின்றனர் இதனூடாக அரச துறையில் வினைத்திறனாக செயலாற்றக்கூடியவர்களாக தம்மை வளப்படுத்திக்கொள்வார்கள்.