பிரக்ஞானந்தா பெற்றோருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் கார் பரிசு..!
செஸ் உலகக் கோப்பை 2023 போட்டியின் இறுதிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார், அதே நேரத்தில் இந்தியாவின் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தா செஸ் மெகா டோர்னமென்ட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த தொடரில் பிரக்ஞானந்தாவின் திறமையான ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியர், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு, குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளைாயட்டு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வரிசையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். முன்னதாக, பிரக்ஞானந்தாவுக்கு ‘தார்’ காரை பரிசளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இதற்குப் பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, ”எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது, தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
மின் வாகனங்களைப் போலவே அவர்களின் பிள்ளைகளும் நம் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு. எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி – ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 (XUV4OO) என்ற மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன்’ என்று பதிவிட்டு ‘என்ன சொல்கிறீர்கள்?’ என தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் ஜெஜூரிகரை டேக் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ராஜேஷ், ‘பிரக்ஞானந்தாவின் பெற்றோரை பெருமைப்படுத்த முன்வந்த ஆனந்த மஹிந்திராவுக்கு நன்றி… நமது நிறுவனத்தின் மின் வாகனங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. விரைவில் தனித்துவமான தயாரிப்புடன் எங்கள் குழு அவர்களை அணுகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனந்த மஹிந்திராவின் பரிசுக்கு பலரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். தன்னைப் போன்ற இளம் திறமையாளர்களை கண்டறிந்தது அவர்களை எதிர்காலத்தின் சாதனையாளர்களாக உருவாக்குவது தான் ஒரு கிராண்ட் மாஸ்டரின் உண்மையான வெற்றி.. அதை இவர் நன்கு அறிவார் என அமித் மிஷ்ரா என்பவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தங்கள் மகனை 10 வயதில் சர்வதேச மாஸ்டராகவும், 12 வயதில் கிராண்ட்மாஸ்டராகவும் ஆக்க ஊக்குவித்த நாகலட்சுமி-ரமேஷ் பாபு தம்பதிக்கு ஆனந்த் மஹிந்திரா எலக்ட்ரிக் காரை பரிசளிப்பதாக அறிவத்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.