ஆதித்யா விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்க்க மக்களுக்கு வாய்ப்பு!
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ பல அளப்பறிய சாதனைகளை செய்து வருகிறது. யாருமே இதுவரை தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் இறங்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. சந்திராயன்-3 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பி, அதை பத்திரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி,அந்த லேண்டரில் இருந்து பிரஞ்யான் ரோவரையும் நிலவின் மேற்பரப்பில் இறக்கி தற்போது வெற்றிகரமாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.
இஸ்ரோவின் இந்த சாதனையை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. இந்த வெற்றி மூலம் உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத நாடாக முன்னேறியுள்ளது இந்தியா. தற்போது மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது இஸ்ரோ. அது தான் ஆதித்யா எல்-1 திட்டம்.
இந்த திட்டம் சூரியனையும், சூரியனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் ஒன்றான எல் 1 என்ற சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியன் குறித்த பல்வேறு விதமான ஆய்வுகள் தகவல்களை பூமியில் உள்ள இஸ்ரோவிற்கு அனுப்ப உள்ளது.
இதற்கான ஏவுதல் வரும் செப்டம்பர் 2ம் தேதி இந்திய நேரப்படி சரியாக காலை 11:50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. இந்த அரிய நிகழ்வை நேரடியாக பார்க்க இஸ்ரோ பொது மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகியுள்ளது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து மக்கள் இந்த நிகழ்வை நேரடியாக கண்டு ரசிக்கலாம். இதற்காக கட்டணம் எதுவும் கிடையாது. பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த லான்ச் கேலரியில் இருக்க முடியும் என்பதால் இதற்கு முன்பதிவு கட்டாயம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதன்படி https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp இந்த லிங்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று (29ஆம் தேதி) சரியாக மதியம் 12மணி முதல் புக்கிங் தொடங்கியது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே புக்கிங் செய்ய அனுமதி உள்ளது. இவ்வாறு புக்கிங் செய்தவர்கள் லான்ச் அன்று நேரடியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்று அங்கு இருந்து ராக்கெட் ஏவுதலை நேரடியாக கண்டு களிக்கலாம். புக்கிங் செய்து நேரில் செல்பவர்கள் அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு சென்றால் மட்டுமே அவர்கள் லாஞ்ச் வியூ கேலரி உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பதிவு செய்யும்போது உங்களது செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்றவை கேட்கப்படும். இதை வழங்கினால் மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். மொத்தம் 5000 பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.