நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை.. காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்
நேற்றிரவு பெங்களூருவில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இரவு ஒன்பது மணிக்கு டெல்லி செல்வதற்காக கிளம்பியது. அந்த விமானத்தில் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த(AIIMS) ஐந்து மருத்துவர்கள் பெங்களூருவில் ஒரு மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்புவதற்காக பயணம் செய்து கொண்டிருந்தனர்.
விமானம் பெங்களூருவில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானப் பணியாளர்கள் ஒரு அவசர செய்தியை தெரிவித்தனர். அதாவது, அந்த விமானத்தில் இருக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்கள் யாராவது விமானத்திற்குள் இருந்தால் உதவ முன்வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உடனடியாக விமானத்திற்குள் இருந்த ஐந்து மருத்துவர்களும் விரைந்து சென்று அந்தக் குழந்தையை பார்த்த போது, அந்தக் குழுந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அந்தக் குழந்தை சுய நினைவு இல்லாமல் இருந்ததோடு, குழந்தையின் நாடித் துடிப்பும் மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்த மருத்துவர்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டனர். உடனடியாக விமானத்தில் இருக்கும் சொற்ப மருத்துவ உபகரணங்களைக் கொண்டு முதலுதவி செய்யத் தொடங்கினார்கள். குழந்தையின் இதயத்திற்கு தேவையான அழுத்தம் கொடுத்தும், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த AED எனப்படும் மருத்துவ உபகரணத்தை கொண்டு குழந்தையின் இதயத்தில் தேவையான அளவு மின்சார அதிர்வு கொடுத்தும் சிகிச்சை அளித்தனர். சுமார் 45 நிமிடங்கள் 5 மருத்துவர்களும் மேற்கொண்ட தீவிர சிகிச்சையால் குழந்தை உயிர் பிழைத்தது.
உடனடியாக விமானம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டு குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இப்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தேவையான மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டால் குழந்தை பூரண குணம் அடைந்து விடும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளித்த AIIMS மருத்துவர் தமன்தீப் சிங்.
பறக்கும் விமானத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டபோது, சமயோசிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஐந்து மருத்துவர்களுக்கும் நாடு மழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.
எய்ம்ஸ் குடும்பம் எப்போதும் தயாராக இருக்கும் என்ற தலைப்போடு இதுகுறித்த பதிவை எய்ம்ஸ் மருத்துவமனையும் X-தளத்தில் பதிவிட்டிருக்கிறது. நடுவானில் குழந்தையின் உயிர் காக்கப்பட்ட சம்பவம் நமது மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் உயர்வான பயிற்சியின் தரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், தங்களுக்கு கிடைத்த சாதாரண மருத்துவ உபகரணங்களைக் கொண்டு குழந்தையின் உயிரை இந்த ஐந்து மருத்துவர்களும் காப்பாற்றிய சம்பவம் மகத்தானது என்றும் பாராட்டியிருக்கிறார் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியர் மன்பிரீத் கவுர்.
இது போன்ற சூழல்களில் மருத்துவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்கு இடம் கொடுத்து விலகி நிற்பது தான் முக்கியம் என பொதுமக்களுக்கு மன்பிரீத் கவுர் அறிவுரையும் வழங்கி உள்ளார்.