மொட்டுவின் பித்தலாட்டம் இங்கு எடுபடாது! – ரணிலின் வெற்றி உறுதி என்கிறார் ஹரின்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றெழுத்து கொண்ட ராஜபக்ச உறுப்பினரோ அல்லது சஜித் பிரேமதாஸவோ அல்லது டலஸ் அழகப்பெருமவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ களமிறங்கினாலும் ரணில் விக்கிரமசிங்க வெல்வது உறுதி. அவரை எவராலும் தோற்கடிக்க முடியாது.”
இவ்வாறு அடித்துக் கூறினார் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து மொட்டுக் கட்சியில் ஒரு தரப்பினர் பித்தலாட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி வன்முறையைத் தூண்ட முயல்கின்றனர். அவர்களின் இந்தப் பித்தலாட்டம் – வெறித்தனங்கள் இங்கு எடுபடாது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளில் பெரும்பாலான உறுப்பினர்களும் நிற்கின்றனர். அதைவிட தமிழ், முஸ்லிம் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ரணிலையே ஆதரிக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் இதன் உண்மை நிலவரம் பகிரங்கமாகத் தெரியவரும். இப்போது வாய்ச்சவடால் விடுபவர்கள் அப்போது மௌனமாகி விடுவார்கள்.
படுகுழியிலிருந்து இலங்கையை மீட்டெடுத்து வரும் ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென நாட்டு மக்கள் விரும்பும்போது அதற்குச் சவாலாகத் தேர்தலில் எவர் களமிறங்கினாலும் அவர்கள் தோற்பது உறுதி. ரணிலை எவராலும் தோற்கடிக்க முடியாது.” – என்றார்.