சர்வதேசமே எமக்கு நீதியை வழங்கு! – யாழ். போராட்டத்தில் உறவுகள் வலியுறுத்து.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று போராட்டப் பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர்.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10:30 மணியளவில் பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் 11 மணியளவில் பேரணியாக யாழ். நகரைச் சுற்றி யாழ். முனியப்பர் கோயிலடி வரை சென்று நண்பகல் 12 மணியளவில் நிறைவு பெற்றது.
இதன்போது இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை; சர்வதேச குற்றவியல் நீதிமன்றினூடாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, சர்வதேசமே எமக்கு நீதியை வழங்கு, தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழர் தேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்து உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தமது உறவுகளைத் தேடி அலைந்து பலரும் உயிரிழந்து வருகின்ற நிலையில் தாமும் இறப்பதற்கு முன்னதாக தங்கள் உறவுகளைத் தங்களிடமே மீட்டுத் தர வேண்டும் எனப் போராட்டத்தில் பங்கேற்ற சொந்தங்கள் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டப் பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.