இனி பெங்களூரில் இருந்து சர்வதேச விமான பயணம் செய்யலாம்
பெங்களூரு கேம்பகவுடா விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது முனையம் செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த இரண்டாவது முனையத்தில் இருந்து சர்வதேச விமானங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இயக்குவதற்கு விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விமான நிலைய முனையம் ஒன்று மற்றும் முனையம் இரண்டு ஆகிய இரண்டிலும் விமான சேவைகளை இயக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதன் மூலமாக, பயண அனுபவங்களை சுமூகமாக்க முடியும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 10:45 மணி முதல் அனைத்து சர்வதேச விமானங்களும் இரண்டாவது முனையத்தில் இருந்து வந்து செல்லும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
முதல் விமானம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் :
புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது முனையத்தில் முதன்முதலாக தரையிறங்க இருக்கும் விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்ததாகும். சிங்கப்பூர் நாட்டின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி காலை 8:05 மணி அளவில் புறப்படுகின்ற இந்த விமானம் பெங்களூர் விமான நிலையம் வந்து சேரும்.
இதுகுறித்து பெங்களூர் விமான நிலையத்தின் மேலாண் இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான ஹரி மரார் கூறுகையில், “சர்வதேச விமான சேவைகள் முழுமையாக இரண்டாவது முனையத்திற்கு மாற்றப்பட உள்ளது. அதே சமயம் முதலாவது முனையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தற்போதைய உள்நாட்டு விமான முனையத்திலும் மறுசீரமைப்பு பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்பட்டு பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பெங்களூர் விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைத்தார். அப்போது முதல் சில உள்நாட்டு விமானங்கள் மட்டும் அந்த முனையத்தை பயன்படுத்தி வந்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய முனையமானது ரூ.5000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 2.50 லட்சம் சதுர மீட்டர்கள் ஆகும். பெரும்பாலும் மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த இரண்டாவது முனையம் இயற்கையான தோற்றத்தை கொண்டிருக்கிறது. சுமார் நான்காண்டு கால முயற்சியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய முனையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 25 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான முனையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயணிகளுக்காக மேம்பட்ட வசதிகள் மற்றும் கூடுதல் கவுண்டர்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பயண அனுபவம் இனிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.