“13” பற்றி மஹிந்தவின் மௌனம் எதற்காக? – கம்மன்பில கேள்வி.
“மரணித்துப்போன 13ஆவது திருத்தத்துக்கு உயிரூட்டும் வகையில் ’13 பிளஸ்’ என்று கூறி கதைவிட்ட மஹிந்த ராஜபக்ச இப்போது ஏன மௌனமாக இருக்கின்றார்?”
இவ்வாறு நேற்று கேள்வி எழுப்பியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ச, 13 பிளஸ் என்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியமையால்தான் 2015இல் தோற்கடிக்கப்பட்டார். அந்த வலியை உணர்ந்துதான் இப்போது அவர் “13” தொடர்பில் வாய் எதுவும் திறக்காமல் உள்ளார் என்று நாம் நினைக்கின்றோம்.
அவரின் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்தான் “13” தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால், கட்சித் தலைவரான மஹிந்த எந்தக் கருத்தையும் வெளியிடாமல் அமைதி காக்கின்றார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கமாட்டார். ஏனெனில் மஹிந்தவுக்கு நடந்தது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கும் நடக்கும் என்ற அச்சம் ரணிலுக்கு இருக்கும். இதை அவருக்கு நாம் எச்சரிக்கையாகவே முதலில் தெரிவித்து விட்டோம்.” – என்றார்.