இராஜாங்க அமைச்சர் இந்திக்க இன்று யாழ் முகாமிலுள்ள மக்களை சந்தித்தார்
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டடப் பொருள் தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களைப் பார்வையிட்டார்.
அவர் காலை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்துக்குச் சென்றார்.
1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து 30 வருடங்களாக நலம்புரி நிலையத்தில் வசித்து வரும் மக்களோடு அவர் கலந்துரையாடினார். மக்களின் பிரச்சினைகளையும் அவர் கேட்டறிந்தார்.
மேலும் மயிலிட்டியில் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டங்களையும் அவர் பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்புகளில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரச அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.