கூட்டம் கூட்டமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் பறவைகள்… அசாமில் ஒரு ‘மர்ம’ கிராமம்!
இந்தியாவில் மர்மமான கிராமம் ஒன்று இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அஸாம் மாநிலத்தில் உள்ள ஜதிங்கா என்ற மர்மமான கிரமாத்தைப் பற்றியே இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம். காணும் இடமெங்கும் பச்சையாக இயற்கை காட்சிகளுடன் அமைதியான இடமாக திகழும் ஜதிங்கா, விசித்திரமான காரணங்களுக்காக பிரபலம் அடைந்துள்ளது.
2,500 மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்கின்றன. அஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 330கிமீ தொலைவிலுள்ள ஜதிங்கா கிராமம், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் தலைப்புச் செய்திகளில் தவறாமல் இடம்பிடித்துவிடும். ஏனென்று கேட்கிறீர்களா? இந்த மாதங்களில், சொல்லி வைத்தாற் போல் மாலை 6 மணி முதல் 9.30 மணிக்குள்ளாக பறவைகள் கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வலசை போகும் பறவைகளும் கூட இப்படி கூட்டமாக தற்கொலை செய்து கொள்கின்றன.
உள்ளூர் மற்றும் புலம்பெயர் பறவைகள் என தோராயமாக 40 வகையான பறவைகள் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றன. இதனாலேயே பலரும் ஜதிங்காவை உலகின் பயமுறுத்தும் இடங்களில் ஒன்று என அழைக்கிறார்கள். ஏன் இந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பறவைகள் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த விளக்கமும் இல்லை. எனினும், இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் அச்சமூட்டும் கதைகளை கூறுகின்றன.
இந்த கிராமம் சாபத்தால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் இதுபோன்ற விபரீதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் சிலர் நம்புகின்றனர். இந்தப் பகுதியில் காந்த சக்தி அதிகப்படியாக இருப்பதனாலேயே இப்படியான சம்பவங்கள் ஏற்படுவதாக வேறு சிலர் கூறுகின்றனர். இதுபோன்று பல கதைகள் கூறப்பட்டாலும், இந்த தற்கொலை நிகழ்விற்கு பின்னால் உள்ள சரியான ஆதாரத்தை இதுவரை யாரும் கூறவில்லை.
இந்த சம்பவங்களுக்கெல்லாம் ‘கெட்ட ஆவிகள்’ தான் காரணம் என பல வருடங்களாக கிராம மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, பறவைகள் அனைத்தும் குழப்பத்தில் திசை மறந்து சுற்றித் திரிவதாகவும், முடிவில் மரத்தில் அல்லது தெருவிளக்கு கம்பங்களில் அல்லது கட்டிடங்களில் மோதி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றன என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
வருடத்தில் ஒன்பது மாதங்கள் இயற்கை காரணங்களுக்காக வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது ஜதிங்கா கிராமம். அதோடு இந்தக் கிராமத்திற்குள் யாரும் இரவு நேரத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் கொத்திப் பறவை, மலாய் குருகு, கருங்குருகு, சிறு வெண்கொக்கு, குளத்துக் கொக்கு (குருட்டு கொக்கு), மற்றும் இந்தியத் தோட்டக்கள்ளன் போன்ற புலம்பெயர் பறவைகளும் இங்கு உயிரை மாய்த்துகொள்கின்றன.
இத்தகைய நிகழ்வு 1910-ம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறது. ஆனால் 1957-ம் ஆண்டுக்குப் பிறகே வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது. பறவையியலாளர் இ.பி.கீ (E.P Gee) எழுதிய “இந்திய வன உயிரினங்கள்” என்ற புத்தகம் மூலம் இந்த கிராமத்தில் நடைபெறும் மர்மமான நிகழ்வு வெளி உலகிற்கு தெரியவந்தது.