நம்பிக்கை அளிக்கும் ஒருமைப்பாடு கொண்ட வருங்காலத்தை உருவாக்குவேன்.
தமது அதிபர் பதவியைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கான நம்பிக்கை அளிக்கும் ஒருமைப்பாடு மிகுந்த வருங்காலத்தை உருவாக்க உதவப்போவதாக தர்மன் சண்முகரத்னம் உறுதி கூறியுள்ளார். இவ்வாண்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சொன்னார்.
“அதிபருக்கு இருக்கும் பொறுப்புகளையும் பங்கையும் பயன்படுத்தி சிங்கப்பூரர்களிடையே நம்பிக்கையையும் ஒருமைப்பாட்டையும் கொண்ட வருங்காலத்தை உருவாக்க நான் உறுதியளிக்கிறேன். அது எமது கடமையாகும்,” என்றார் தர்மன். வெள்ளிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்த தாமான் ஜூரோங் உணவங்காடிச் சந்தையில் அவர் பேசினார்.
66 வயது தர்மன், சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகப் பதவியேற்கவிருக்கிறார். இவ்வாண்டு அதிபர் தேர்தலில் அவர் 70.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72 விழுக்காடு வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 விழுக்காடு வாக்குகளையும் பெற்றனர்.
பல்வேறு வாழ்க்கைச் சூழல்களிலிருந்து வரும் ஜூரோங் வாசிகளுடன் தாம் நல்லுறவை வளர்த்துக்கொண்டிருப்பதாக முன்னாள் மூத்த அமைச்சரான தர்மன் தமது பிரசாரத்தின்போது பல முறை குறிப்பிட்டிருந்தார். மேலும், தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் வசதி குறைந்தோருக்கு உதவி அவர்களை மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அடிமட்டத்திலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் சமுதாயத்தில் நிலவும் மாறுபட்ட கருத்துகளை இணைக்கும் முயற்சிகளை எடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
தர்மன், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முதல் சீனர் அல்லாத வேட்பாளர்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தர்மன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூரோங் குழுத்தொகுதியின் தாமான் ஜூரோங் பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். அங்குதான் அவர் 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக அரசியல் களத்தில் இறங்கினார்.
பல ஆண்டுகளாக அத்தொகுதியில் அவர் வலுவான ஆதரவைச் சம்பாதித்துள்ளார். 2020 பொதுத் தேர்தலில் ஜூரோங் குழுத்தொகுதியில் தர்மனின் மக்கள் செயல் கட்சிக் குழு 74.62 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிகண்டது.