’13’ இற்குச் சமாதி; இதில் நான் உறுதி – சரத் வீரசேகர சூளுரை
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு முடிவுகட்டியே தீர வேண்டும். இதில் நான் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றேன். ஆனால், இது அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல; இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.”
– இவ்வாறு உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போது செயற்படாத நிலையில் உள்ள மாகாண சபை முறையால் நாட்டுக்கு நன்மையா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மாகாண சபை முறை மூலம் நாட்டுக்கு நன்மை என்றால் அதனைத் தொடர வேண்டும். இல்லையேல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்குவது குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன. ஆனால், மாகாண சபைகளுக்கு முமுமையான அதிகாரங்களை வழங்கினால் அரசானது காணி, பொலிஸ் அதிகாரங்களையும், தொல்பொருள் சின்னங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் இழக்க நேரிடும்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் காரணமாகவே மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. இதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்” – என்றார்.