பிரபாகரனைத் தவிர வேறு தமிழ்த் தலைவர்கள் சிங்களவர்களால் கொல்லப்படவில்லை! – சித்தார்த்தன் சொல்கின்றார்.

“என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தம்பி பிரபாகரனைத் தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்களப் படைகளால் அல்லது பொலிஸாரால் அல்லது சிங்களத் தரப்பால் கொல்லப்படவில்லை.”
இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று தெரிவித்தார்.
யாழ்., தாவடியில் இன்று நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழர் தரப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள், மோதல்களால் பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம். குறிப்பாக என்னுடைய தந்தையாரைக் (வி.தர்மலிங்கம்) கூட நான் இழந்திருக்கின்றேன். இதனை யார் செய்தார்கள் என்பதும் எங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
அதற்காகப் பழிவாங்கும் உணர்வோடு அல்லது அந்த நோக்கத்தோடு நாம் செயற்படவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் மன்னித்து ஒருமித்து ஓரணியாகப் பலமான சக்தியாகச் செயற்பட வேண்டும்.
இதைவிடுத்துப் பழிவாங்கும் நோக்கத்துடன் நாம் செயற்படுவோமாக இருந்தால் எமது இனம் இன்னும் இன்னும் பின்னோக்கிச் சென்று பெரும் பாதிப்பையே எதிர்நோக்க வேண்டியதாக இருக்கும்.
தமிழ் அரசியல் தலைவர்களில் எனது தந்தையாரே முதலில் கொல்லப்பட்டிருக்கலாமென நான் நினைக்கின்றேன். அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கொலைகள் இடம்பெற்றும் இருக்கின்றன.
என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தம்பி பிரபாகரனைத் தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்களப் படைகளால் அல்லது பொலிஸாரால் அல்லது சிங்களத் தரப்பால் கொல்லப்படவில்லை.
கொல்லப்பட்ட அத்தனை பேரும் குறிப்பாக இறுதியாகக் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஐசிங்கம் வரை இவர்களெல்லாம் தமிழ்த் தரப்புக்களாலே படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இருந்தாலும் இதையே பேசிக் கொண்டு இருப்போமானால் இனத்தைக் கூறுபோடுவது மட்டுமல்ல பலவீனமான நிலைக்கே இட்டுச் செல்லும் ஆபத்தும் உள்ளது.
ஆகவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; அதனை மன்னித்து அடுத்தகட்ட அரசியலை எடுத்துச் செல்ல வேண்டுமென்ற சிந்தனையில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
மேலும் நடந்தவைகளை மீண்டும் மீட்டிக் கொண்டிராமல் அதனை மன்னித்து ஒற்றுமையை உருவாக்கினால் பலமான சமூகத்தை உருவாக்க முடியும். ஆகையால் இனத்தின் எதிர்காலம் கருதி மன்னித்து ஓரணியாகச் செயற்பட வேண்டும்
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துங்கள் என்று நாங்கள் உட்பட சில தரப்புகள் இணைந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதுதான் இறுதி முடிவாக நீங்கள் யாரும் சொல்லவில்லை.
13 ஐ ஏன் கேட்கின்றோம் என்றால் இருப்பதையாவது முதலில் காப்பாற்றுங்கள் என்பதற்காகவேதான். உண்மையாகவே சமஷ்டி அடிப்படை தீர்வுதான் எங்கள் எல்லோராலும்கூடக் கேட்கப்படுகின்றது. அதனை அடைவதற்கு முன்னதாக இருப்பதை நடைமுறைப்படுத்தக் கோருவதில் என்ன தவறு இருக்கின்றது.?
இந்த 13 ஆவது திருத்தத்தை வேண்டாம் என்றுவிட்டு இலங்கை அரசுக்கு நிலைமைகளைச் சாதகமாக்குவதால் எங்கள் இனத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்குச் சிங்களத் தரப்பில் பலர் அக்கறையாக உள்ளனர்.
தற்போதைய நிலைமைகளைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிந்துவிட்டது. எல்லோரும் அமைதியாக உள்ளோம். ஒரே நாட்டுக்குள் வாழலாம் என்ற சிந்தனையில் சிங்களத் தரப்பில் உள்ளவர்கள் இந்த 13 ஆவது திருத்தம் தேவையில்லை என்றும், அதனை நீக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
நாட்டில் மத, இன, மொழி ரீதியாகப் பாகுபாடு காட்டப்படுகின்றது. சிங்கள மதம், சிங்கள இனம், சிங்கள மொழி தான் முதன்மையானது என்ற சிந்தனையில் சிங்கள பௌத்த மயமாக்கலைச் செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களைப் போல் மீண்டும் இன ரீதியான பாகுபாடுகள், முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலைமைகள் தொடர அனுமதிக்கக்கூடாது. இதனைத் தடுத்து நிறுத்துவதே நாட்டுக்கு நல்லது.” – என்றார்.