வடக்கு, கிழக்கில் விகாரைகளை ஏன் நிர்மாணிக்கக்கூடாது? எந்தச் சட்டத்தில் அப்படி இருக்கின்றது? – அமைச்சர் விதுர இப்படிக் கேள்வி.
“இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”
இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.
‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.
எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.