சுகாதார அமைச்சருக்கு எதிரான பிரேரணை: தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதா? நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.
இதேவேளை, அந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது பிரேரணையை ஆதரிக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன கருத்துத் தெரிவித்துள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., “சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எமது நாடாளுமன்றக் குழு கூடியே தீர்மானிக்கும். அக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (நாளைமறுதினம்) ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வு நாட்களில் நடைபெறவுள்ளது.” – என்றார்.
அதேவேளை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., “எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.