ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தமிழ்ச் சமூகம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! – கஜேந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு
“தமிழர் தாயகத்தைச் சிங்கள மயமாக்கும் – பௌத்த மயமாக்கும் நோக்குடன் சிங்கள – பௌத்த அடிப்படைவாதிகள் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தமிழ்ச் சமூகம் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து நேற்று (03) மனித சங்கிலிப் போராட்டம் திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திருகோணமலை மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் சிங்கள – பௌத்த இனவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்குப் பொலிஸாரும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். அவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். இதனூடாக எமது உரிமைப் போராட்டத்துக்கு எதிராகத் தடை உத்தரவுகளையும் பொலிஸார் பெறுகின்றனர்.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தின் தலைநகராகத் திருகோணமலை விளங்குகின்றது. இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கின்றபோது திருகோணமலை மாவட்டத்தில் 4 வீதமான சிங்களவர்கள் மாத்திரமே வாழ்ந்தார்கள். ஆனால், இன்று இம்மாவட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 800 வீதமாக சிங்களவர்களின் வளர்ச்சி திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்றது. சட்டவிரோத திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி – பௌத்த விகாரைகளை அமைத்து தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எங்கள் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருப்போம்.” – என்றார்.
……………….