யாழ்.வைத்தியசாலை : காய்ச்சல் என அனுமதித்த 8 வயது சிறுமியின் கை துண்டிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இன்று (4) யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களினால் கை அகற்றப்பட்டுள்ளது.
சுமார் நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் வைத்தியரிடம் சிகிச்சை அளித்தும் குணமடையாத நிலையில் இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அந்த வார்டுக்கு பொறுப்பான தாதி, சிறுமியின் கையில் கேனுலாவை (டிரிப்) பொருத்திய பின்னர், அவரது கை படிப்படியாக செயலிழக்க தொடங்கியுள்ளது.
இதுபற்றி உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்த நிபுணர்கள், சிறுமியின் உயிரை காப்பாற்றும் வகையில், அவரது கையை உடனடியாக அகற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சிறுமியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கொண்டு சென்று கையை அகற்றி சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்து வித்தியாலயத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் எட்டு வயது பாடசாலை மாணவி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற நிலையில் கையை இழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பி.சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.