”கொள்ளையடிக்க முடியல.. நல்ல வங்கி இது” – வங்கிக்கு லெட்டர் எழுதி வைத்த திருடன்
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி கிளையின் லாக்கரை கொள்ளையடிக்க முயன்றபோது அதனை திறக்க முடியாததால் அந்த கொள்ளையன், ‘நல்ல வங்கி’ என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றதாக அம்மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முகமூடி அணிந்த அந்த திருடன் கடந்த வியாழக்கிழமை அன்று நென்னல் மண்டல் தலைமையகத்தில் உள்ள அரசு நடத்தும் கிராமப்புற வங்கிக் கிளையின் பிரதான கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்த திருடன் காசாளர் மற்றும் குமாஸ்தாக்களின் அறைகளை உடைத்து திருட முயன்றதாகவும், ஆனால் நாணயமோ அல்லது மதிப்புமிக்க பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை என்பதால் லாக்கரை திறக்காமல் விட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் திருடன் ஒரு செய்திக்குறிப்பை விட்டுச்சென்றதாகவும் அதில், ‘என்னால் இங்கு ஒரு ரூபாய்கூட எடுக்கமுடியவில்லை… அதனால் என்னைப் பிடிக்காதீர்கள். என் கைரேகைகள் எங்கும் இருக்காது. இது ஒரு நல்ல வங்கி’ என்று எழுதியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் கூறிய போலீசார், இந்த வங்கி குடியிருப்பில் இருந்து செயல்படுவதால் பாதுகாப்பிற்கு காவலர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த நாள் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கவனித்த வங்கி அதிகாரிகள், போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
திருடனைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.