ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை மிக அவசியம்! – நாடாளுமன்றில் சஜித் இடித்துரைப்பு.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிய சர்வதேச விசாரணை மிகவும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய வெளிநாட்டு ஆலோசனை தேவையா? அதனைச் செய்யுமாறு வெளிநாட்டு ஊடகம்தான் வலியுறுத்த வேண்டுமா? அதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு இல்லையா?

எமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இல்லையா? உண்மைகளைக் கண்டறியவும், உண்மையைப் பேசவும் எமது நாட்டு அரசியல்வாதிகளுக்குப் பொறுப்பில்லையா?.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பேராயர் கர்தினால் எனக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியதற்கு நான் கவலைப்படவில்லை. அவர் தமது மனதுக்குள் இருந்த கவலை காரணமாக அவ்வாறு கூறியிருந்தால் நான் அதற்காகக் கவலைப்படப்போவதில்லை.

கிறிஸ்தவ மக்களுக்கு இந்தக் கவலை இன்னமும் உள்ளது. எமது நாட்டின் உள்ளக விசாரணைகளின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிய முடியாது. இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை மிகவும் அவசியமாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.