உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்… வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா.
உக்ரைன் மீது 18 மாதங்களுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது. அதேபோன்று மேற்கத்திய நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன. இதனால் உக்ரைன் எதிர்தாக்குல் நடத்தி வருகிறது. அதேவேளையில் ரஷியாவிற்கு ஈரான், வடகொரியா, சீனா ஆகியவை உதவி புரிந்து வருகின்றன. ஆனால், வெளிப்படையாக உதவி செய்வதாக கூறவில்லை.
இந்த மூன்று நாடுகளுக்கும் அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் வடகொரிய ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. ரஷியா தாக்குதல் தொடங்கிய பிறகு வெளிப்படையாக இந்த செய்தி உலா வருகிறது. இதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்தை வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ”உக்ரைனுக்கு எதிராக சண்டையிடும் வகையில் வடகொரியா, ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கொரியா தீபகற்பத்தில் அணுஆயுத கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்திய விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்கா-தென்கொரியாவுக்கும் (கூட்டு) இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் வடகொரிய மீது தாக்குதல் சதி நடத்தப்பட வாய்ப்புள்ளதால், தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.