திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவிக்கும் பீகார் இளைஞர்கள்..!
நமக்கு நல்ல வேலை கிடைக்காதா என பலரும் ஏங்கிக் கொண்டிருப்பது போல், பீகாரில் உள்ள ஒரு கிரமாத்து இளைஞர்கள் நமக்கெல்லாம் திருமணமே ஆகாதா என விரக்தியில் இருக்கிறார்கள். அதற்காக இந்தக் கிராமத்தில் ஒரு திருமணம் கூட இதுவரை நடைபெறவில்லையா என நீங்கள் கேட்பீர்கள். அப்படி நடந்த திருமணமும் மிகுந்த சிரமத்திற்கிடையே தான் நடைபெற்றது. உண்மையில் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்வதற்கு பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பீகார் மாநிலத்தின் ஜாமூ மாவட்டத்திலுள்ள பரூத்தா கிராமத்தை பற்றிதான் இவ்வுளவு நேரமும் சொல்லிக் கொண்டிருந்தோம்.
அக்கம்பக்கத்தில், உறவுக்கார முறையில் பெண்கள் இருந்தாலும், இந்தக் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் அவ்வுளவு சீக்கிரத்தில் பெண் தர சம்மதிப்பதில்லை. பலகட்ட விசாரிப்புகளுக்குப் பிறகே தங்கள் மகளை இங்குள்ள ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
பரூத்தா கிராமத்தில் உள்ள மஹாதலித் பகுதியின் ஐந்தாவது வார்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு எந்தவித சாலை வசதியும் இல்லாத்துதான் இவர்களின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்களது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் மெயின் சாலை உள்ளது. அங்கு செல்வதற்கு தினமும் முழங்கால் அளவிற்கு சேறு நிறைந்த நீரில் இவர்கள் இறங்கி நடக்கிறார்கள். சாலை வசதிகள் எதுவுமே இல்லாத காரணத்தினால், இந்தக் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டேன் எனக் கூறுகிறார்களாம். இந்தக் காரணத்திற்காகவே பல இளைஞர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள்.
“இங்கு சாலை வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால், எங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் நிலவுகிறது. எங்களது உறவினர்கள் கூட தங்கள் வீட்டிலுள்ள பெண்களை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அப்படியே ஒன்றிரண்டு திருமணம் நடந்தாலும், அதுவும் பாதியிலேயே முறிந்து போய்விடுகிறது. சேறு நிறைந்த இந்த சாலைகளில் தங்கள் மகள்களை யார்தான் நடக்கவிடுவார்கள்” என வேதனையோடு கூறுகிறார் முனியா தேவி.
இந்தக் கிராமத்தின் நடுவிலேயே அரசு பள்ளி ஒன்று செயல்படுகிறது. இதில் மஹாதலித் காலனியைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு மழைக்காலம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். இதனால் மழை நீர் அனைத்தும் சாலைகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். இதன் காரணமாக மழைக்காலங்களில் மாணவர்களால் பள்ளிக்கு கூட ஒழுங்காக செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அப்படியும் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தோள் மீது சுமந்து பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள்.
இவர்களின் கல்விக்கும் கிராமத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் இவ்வுளவு முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. “புதிய சாலை அமைக்க என் நிலத்தை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனாலும் இது தொடர்பாக எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை” என வருத்தப்படுகிறார் ஷாந்தனு பாண்டே. இப்படிப்பட்ட கிராமத்திற்கு பெண்களை திருமணம் செய்துகொடுக்க பக்கத்து கிராமத்தினர் தயங்குகின்றனர். இந்நிலை மாறுமா என்பதே அப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.