சனாதன சர்ச்சை: உதயநிதி, பிரியங்க் கார்கே மீது வழக்குப் பதிவு
சனாதன தர்மம் குறித்து பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும், அதற்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே மீதும் உத்தரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராய்பூரில், இந்து மத நம்பிக்கையை புண்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153ஏ, 295ஏ-ன் கீழ் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், இருவரது பேச்சும் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி வழக்குரைஞர்கள் ஹர்ஷ் குப்தா, ராம் சிங் லோதி ஆகியோர் அளித்த குற்றச்சாட்டை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தாா். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிா்ப்பும், ஆதரவும் மாறி மாறி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியும், இந்து அமைப்புகளும் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்துக்கு கடும் எதிா்ப்பையும்,கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.
கடும் எதிர்ப்புகளுக்கு பதில் அளித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், சட்ட ரீதியாக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், வழக்கமான மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே உதயநிதி வீடு இருக்கும் பகுதியில் சில அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை ‘சன் ரைஸ் அவென்யூவில்’ அமைந்துள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் செவ்வாய்க்கிழமை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.