ஒடிசாவில் 2 மணி நேரத்தில் 61,000 மின்னல்கள்.. பலரின் உயிரை பறித்த பகீர் சம்பவம்!
ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய புள்ளி விபரங்கள்
ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (OSDMA), சமூக ஊடக தளமான X-ல் மாலை 5.30 மணியளவில், 36,597 மேகத்திலிருந்து மேகத்திற்கு (கிளவுட் டூ கிளவுட்) மின்னல் தாக்குதல்கள் இருந்தன. அதே நேரத்தில் 25,753 மேகத்திலிருந்து தரையில் (கிளவுட் டூ கிரவுண்ட்) மின்னல் தாக்குதல் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளன, என பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள்
ஒடிசாவின் ஆறு மாவட்டங்களில் சனிக்கிழமையன்று மின்னல் தாக்கியது. இதன் காரணமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 3 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மையின் சிறப்பு நிவாரண ஆணையர் (SRC) தெரிவித்துள்ளார். அந்த உயிரிழப்புகளில் அங்கூல் மாவட்டத்தில் ஒருவர், போலங்கிரில் இருவர், பௌத்தில் ஒருவர், ஜகத்சிங்பூரில் ஒருவர், தேன்கனலில் ஒருவர் மற்றும் கோர்தாவில் நான்கு பேர் என மொத்தம் 10 பேர் அடங்குவர். மேலும் காயமடைந்த மூன்று நபர்கள் கோர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று SRC தெரிவித்துள்ளது.
”வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் காற்றில் கடுமையான வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் இருப்பதால் மின்னல் நிகழ்ந்தது. கடுமையான வெப்ப அலைகளும் மற்ற காலநிலை மாற்றங்களும் ஒரிசாவில் மின்னல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. வங்காள விரிகுடாவின் திடீர் ஈரப்பதம் ஒடிசாவில் மின்னல் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) புவனேஸ்வர் மையத்தின் முன்னாள் இயக்குனர் எஸ்.சி.சாஹு தெரிவித்தார்.
முன்னதாக மே மாதம், நாயகர் மாவட்டத்தின் சரணகுல போலீஸ் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.