மூதாட்டியை தவிக்கவிட்ட விமான சேவை.. இன்ஸ்டாவில் கொதித்த மகன்!
விமான சேவைகள் சரியில்லை, விமான பணிப்பெண்கள் சரியாக கவனிக்கவில்லை, உணவு சரியில்லை, விமானம் தாமதமாக வந்து சேர்ந்தது என்று விமான சேவைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகும். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர் விஸ்தாரா விமான நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். அதைப்பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
டாடா நிறுவனத்திற்கு சொந்தமான விஸ்தாரா ஏர்லைன்ஸ், பார்வையற்ற ஒரு முதிய பெண்மணியை விமானப் பயணத்தின்போது கவனிக்காமல் விட்டுள்ளது என்று புகார் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வந்துள்ளது. டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பார்வையற்ற ஒரு மூதாட்டி பயணித்து இருக்கிறார். ஆனால், அவரை விமான ஊழியர்களும், பணிப்பெண்களும் கவனிக்கவே இல்லை என்று அவரது மகன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.
இதுவரை விஸ்தாரா ஏர்லைன்சின் சேவையின் தரம் பற்றி எந்த புகாரும் வந்ததில்லை. பல விருதுகளையும் வாங்கி இருக்கும் நிறுவனத்தின் மீது இப்படி ஒரு புகார் வந்திருக்கிறது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்படி என்ன நடந்தது?
விமானம் கொல்கத்தாவைச் சென்றடைந்த பின்பு அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறங்கி சென்று விட்டனர். ஆனால் அந்த முதாட்டி மட்டும் விமானத்திலேயே இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக விமானத்தை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர் அவர் அழுவதை அறிந்து கொண்டபின் மற்றவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் அந்த மூதாட்டி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டுள்ளார்.
ஆயுஷ் கெஜ்ரிவால் என்பவர் தன்னுடைய தாயார் மிகவும் இக்கட்டான சூழலில் பயணம் செய்திருக்கிறார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். கண் தெரியாத தன்னுடைய அம்மாவிற்கு உதவி தேவைப்படும் என்பதை டிக்கெட் புக் செய்யும் போது தெளிவாக குறிப்பிட்டு இருந்த போதும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் கவனக்குறைவாக நடந்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். விமானப் பயணத்தில், அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விஸ்தாரா ஏர்லைன்சை டேக் செய்து, ‘பார்வையற்ற என்னுடைய அம்மா இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் பயணம் செய்யும் அளவுக்கு நீங்கள் எப்படி கவனக்குறைவாக இருந்தீர்கள்? இது போன்ற உடல்நலக்குறைவு இருக்கும், மாற்றுத்திறனாளி பயணிகளை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை தானே; பயணம் செய்யும்போது அவர்களுக்கு உதவி மற்றும் மேற்பார்வை தேவை, நீங்கள் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக அலட்சியமாக இருந்தீர்கள் என்று நினைக்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
ஒரு இடத்தில் வழி தவறி போனாலே நாம் திணறுவோம். இந்நிலையில் விமானத்தில் இருக்கும் அனைவரும் இறங்கிச் சென்ற பின்பு பார்வை இல்லாமல் தனியே இருப்பது எவ்வளவு அதிர்ச்சிக்குரியதாக இருக்கும் என்பதை அனைவருமே யூகிக்க முடியும்.
புகாருக்கு பதிலளிக்கும் விதமாக, விஸ்தாரா சார்பிலிருந்து ஐஸ்வர்யா என்பவர் ‘ஆயுஷ் உங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். விஸ்தாராவில் எப்போதுமே நாங்கள் உயர் தரமான சேவையை வழங்கி வருவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது வருத்தமளிக்கிறது. எங்களுடைய வாடிக்கையாளர்களின் நலமும் பாதுகாப்பும் தான் எங்களுக்கு முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை அளிப்போம் என்பதிலிருந்து நாங்கள் எப்பொழுதும் பின்வாங்க மாட்டோம். உங்களுடைய புக்கிங் விவரங்கள் மற்றும் ரெபரன்ஸ் நம்பளோட நம்பரை எனக்கு நேரடியாக மெசேஜில் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.