யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக உக்ரைனிற்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைனிற்கானஅமெரிக்காவின் நிதிமனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஸ்யா இந்த நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உக்ரைன் தலைநகருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் புதிய நிதி உதவி திட்டத்தை அவர் அறிவிப்பார். உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனினும் ஒடெசா பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகரில் பிளிங்கென் ரஸ்யாவுடனான போரில் கொல்லப்பட்டஉக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.