வக்னர் தலைவர் எவக்னி பிரிகோசின் மரணம் எழுப்பும் கேள்விகள் : சுவிசிலிருந்து சண் தவராஜா
ரஸ்ய அரசுக்கு எதிராகக் கலகக் கொடி உயர்த்தி செய்திகளில் இடம் பிடித்திருந்த வக்னர் தனியார் இராணுவக் குழுவின் தலைவர் எவக்னி பிரிகோசின் விமான விபத்து ஒன்றில் உயிரை விட்டு மீண்டும் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்து விட்டார். ஆகஸ்ட் 23ஆம் திகதி மாஸ்கோவில் இருந்து சென்.பீற்றஸ்பேர்க் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த விமானம் விபத்துக்கு ஆளாகியதில் விமானத்தில் பயணம் செய்த பிரிகோசின் உள்ளிட்ட அனைவருமே மரணத்தைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் யூன் 23ஆம் திகதி பிரிகோசின் தலைமையிலான வக்னர் குழு ரஸ்ய அரசுக்கு எதிரான பிரகடனத்தை மேற்கொண்டதுடன் மாஸ்கோ நகரைக் கைப்பற்றப் போவதாக அறிவித்து விட்டு அதற்கான நகர்வுகளை மேற்கொண்ட போது உலக அரங்கில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக களத்தில் மிகவும் காத்திரமான பங்கை ஆற்றிவந்த வக்னர் குழு திடீரென இத்தகைய ஒரு முடிவை எடுத்த போது அந்தச் செய்தியை நம்புவதற்கு பலருக்கும் கடினமாக இருந்தது.
எனினும் பெலாரஸ் நாட்டின் தலைவர் அலெக்சான்டர் லுகஷென்கோ தலையிட்டு இரு தரப்புக்கும் இடையே நடாத்திய பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டதுடன் கலகம் முடிவுக்கு வந்தது. கலகத்தில் ஈடுபட்ட வக்னர் குழு உறுப்பினர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பெலாரஸ் நாட்டில் அவர்களுக்கு அரசியல் தஞ்சமும் வழங்கப்பட்டது. அவர்களோடு சேர்ந்து பிரிகோசினும் நாட்டைவிட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் ரஸ்யாவிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவரை நேரில் சந்தித்துப் பேசியதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த விமான விபத்து சம்பவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார்.
விபத்து நடந்தபோது விமானத்தில் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலும் விமானம் சுடப்பட்டு அல்லது விமானத்தில் குண்டு வெடிக்க வைக்கப்பட்டு விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், ரஸ்ய அரசுத் தரப்பில் இருந்து விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் விபத்து தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ள ரஸ்யா, பெரும்பாலும் இது சதி வேலையாகவே இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளது.
காரணம் எதுவாக இருந்தாலும் இந்த விபத்து தற்செயலான ஒன்றல்ல என எழும் சந்தேகம் நியாயமானதே. சர்ச்சைக்குரிய நபராகவும் அதேநேரம் பலம்மிக்க ஒரு தனியார் இராணுவத்தின் தலைவராகவும் விளங்கும் பெரும் செல்வந்தரான ஒருவர் திடீரென விமான விபத்தில் சிக்குவதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ரஸ்ய அரசுத் தலைவர் புட்டினுக்கு எதிராக – சரியாகச் சொல்வதானால் ரஸ்யாவின் இராணுவத் தலைமைப் பீடத்துக்கு எதிராக – போர்க் கொடி உயர்த்திய ஒருவர் திடீரென விபத்தில் சிக்கி மரணத்தைத் தழுவியதால் அவரது மரணத்தின் பின்னணியில் புட்டின் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுவதும் நியாயமானதே. ஆனால், இதனால் அவருக்கு என்ன இலாபம் இருக்கக் கூடும் அல்லது பிரிகோசின் மரணத்தைத் தழுவுவதால் உண்மையில் யார் யாருக்கு இலாபம் இருக்கக் கூடும் என்ற கேள்விகளை எழுப்புவதன் ஊடாக உண்மைக்கு அருகில் ஓரளவேனும் செல்ல முடியும்.
ஒரு காலத்தில் புட்டினின் சமையல்காரராக, மிகுந்த விசுவாசத்துக்கு உரிய ஒருவராக விளங்கியவர் பிரிகோசின். புட்டினின் நகர்வுகளை ஓரளவேனும் அவர் நிச்சயம் அறிந்து வைத்திருப்பார். யூன் 23ஆம் திகதி நடைபெற்ற சதி முயற்சியின் பின்னர் – மன்னிப்பு வழங்கப்பட்டாலும் கூட – தனது பாதுகாப்பு தொடர்பில் அதீத அக்கறையும் கவனமும் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் நினைத்திருந்தால் தனது முக்கிய தளபதிகளுடன் விமானப் பயணத்துக்குத் துணிந்திருப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
தோல்வியடைந்த சதி முயற்சியைத் தொடர்ந்து புட்டினை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர் தனது பாதுகாப்பு தொடர்பில் பிரிகோசின் ஏதோவொரு முடிவுக்கு வந்ததனாலேயே அவர் ரஸ்யாவில் சுதந்திரமாக நடமாடும் முடிவை எடுத்திருப்பார். அது மட்டுமன்றி அவர் அண்மையில் ஆபிரிக்காவுக்கும் சென்று வந்திருந்தார். அந்தப் பயணம் கூட ரஸ்ய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவே அமைந்திருந்தது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் பிரிகோசினின் மரணத்துக்கு புட்டின் காரணமாக இருந்திருப்பார் என்ற முடிவுக்கு வருவது சிரமமே. அது மாத்திரமல்ல பிரிகோசினை மரணிக்கச் செய்வதற்கு புட்டினுக்கு ஆயிரம் வாய்ப்புகள் இருக்கையில் எதற்காக விமான விபத்துக்காகக் காத்திருக்க வேண்டும். பிரிகோசினைக் கைது செய்து சிறையில் அடைத்தால்கூட இன்றைய நிலையில் அதனைக் கேட்பதற்கு ஆள் இல்லை. அது மாத்திரமன்றி பிரிகோசின் ஆபிரிக்கா சென்றபோது கூட ஒரு விபத்தை ஏற்படுத்தி அவரைக் கொலை செய்திருக்க முடியும்.
ஆனால், எந்தவொரு முகாந்திரமும் இன்றி விபத்து தொடர்பான செய்திகள் வெளியாகிய கையோடு மேற்குலக ஊடகங்கள் யாவும் விமான விபத்தின் பின்னணியில் புட்டின் இருப்பதாக ஊகங்களையும், செய்திகளையும் வெளியிடத் தொடங்கிவிட்டன. அதேபோன்று மேற்குலக ராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தங்கள் பங்குக்கு புட்டினை நோக்கி விரல்களை நீட்டத் தொடங்கிவிட்டனர். ஒருவகையில் பார்க்கும் போது இது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்கின்ற கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வக்னர் குழுவைப் பொறுத்தவரை அவர்கள் உக்ரைன் களமுனையில் உக்ரைனியப் படையினருக்கு பலத்த சவாலாகத் திகழ்ந்து வருகின்றனர். அதேபோன்று உலகின் பல நாடுகளில் குறிப்பாக ஆபிரிக்காவில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் ஏகாதிபத்திய முயற்சிகளுக்குப் பலத்த தடையாகவும் விளங்கி வருகின்றனர். அந்த வகையில் வக்னர் குழுவை ஒடுக்க வேண்டிய தேவை மேற்குலகிற்கே அதிகம் உள்ளதை உணர முடிகின்றது.
ஒரு வகையில் உக்ரைன் போரிலும், உலகளாவிய அடிப்படையில் ரஸ்யா மேற்கொண்டுவரும் பல அரசியல் நகர்வுகளுக்கும் வக்னர் குழுவினரின் உதவி ரஸ்ய அரசுத் தலைமைக்குத் தேவைப்படுகின்றது. எனவே தனக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சக்தியை தானே அழித்துக்கொள்ள ரஸ்யா முனையும் என எதிர்பார்ப்பது அறிவிழிவு.
ஆனால் மறுபுறம், யூன் 23இல் பிரிகோசின் புட்டினுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய போதில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த உக்ரைனும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் தமக்குச் சார்பாக அவரைப் பயன்படுத்திக் கொள்ள பெரிதும் முயன்றன. அவரது சதி முயற்சியைக் கொண்டாடித் தீர்த்தன. ஆனால் எதிர்பார்த்தவாறு நடைபெறாமல் போனது மட்டுமன்றி எதிர்பார்ப்புக்கு மாறாகவே காரியங்கள் நடந்தேறின.
கள முனையில் ரஸ்யப் படைகளைக் குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாகப் போரிடும் வக்னர் குழு உள்ளிட்ட தனியார் இராணுவங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறும் உக்ரைனும், அதன் பின்னணியில் செயல்படும் நேட்டோவும் பிரிகோசினை களத்தில் இருந்து அகற்றும் முடிவை எடுப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.
பிரிகோசினின் மரணம் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் மேனாள் அதிகாரியான அலெக்சான்டர் வின்ட்மான் இவ்வாறு எழுதியிருந்தார். “இந்தப் படுகொலை உக்ரைனில் சமாதானத்தைத் துரிதப்படுத்தும். போரின் உக்கிரத்தைக் குறைக்கும்.”
உக்ரைனில் நேட்டோ ஆதரவு சிந்தனையாளர் குழாமான Transatlantic Dialogue Center இன் தலைவரான Maksym Skrypchenko பின்வருமாறு எழுதியிருந்தார். “உண்மையில் இந்த யுத்தப் பிரபுவின் மரணச் செய்தி உக்ரைனுக்கு மிகவும் நல்லது. பிரிகோசின் மற்றும் அவரது வலதுகரமான டிமித்ரி உக்ரின் ஆகியோரின் மரணங்கள் எதிர்வரும் காலங்களில் போர்க் களத்தில் உக்ரன் படையினின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.”
இவற்றைப் போன்ற பல்வேறு கருத்துக்கள் மேற்குலக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. அவற்றின் வழி பார்க்கும் போது பிரிகேசினின் மரணம் மேற்குலகிற்கே அதிக நன்மை பயக்கக் கூடியது எனப் புரிகின்றது.
சரச்சைக்குரிய நபர்களின் இதுபோன்ற மரணங்கள் பல இன்னமும் கூடப் புரியாத புதிர்களாகவே உலகம் முழுவதிலும் வலம்வந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். பிரிகோசினின் மரணம் கூட அவ்வாறு அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராகவும் இருக்கட்டும். ஆனால் தற்போதைய நிலையில் அவரது மரணத்தால் அதிகம் நன்மையடையும் வாய்ப்பு மேற்குலகிற்கே உள்ளதாகத் தெரிகிறது.