பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பான ரணிலின் யோசனை அமைச்சரவையில்!

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” அவசியப்படுகிறது. அதன்படி இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
அதற்கமைய,
* 2030 இல் இலங்கையின் மூலோபாய அறிவு மற்றும் சவால்கள்
* இலங்கையின் பாதுகாப்பு முக்கியத்துவம்
* 2030 பாதுகாப்பு கொள்கையின் நோக்கங்கள்
* மூலோபாய சவாலை எதிர்கொள்ளும் இயலுமை மற்றும் வலு
* தற்போதுள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்
– உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல்.
இதற்காக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க (ஓய்வு) தலைமையிலான, மீளாய்வுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதோடு, அந்த குழுவில் ரியர் அட்மிரல் ஜே.ஜே.ரணசிக் (ஓய்வு), மேஜர் ஜெனரல் ஜீ.ஆர். வணிகசூரிய (ஓய்வு), எயார் வைஸ் மார்ஷல் எண்ட்ரூ விஜேசூரிய (ஓய்வு), சஷிகலா பிரேமவர்தன (இலங்கை வெளிநாட்டுச் சேவை) டேனியல் அல்போன்ஸ் (ஆலோசகர் – நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேவையிலிருக்கும் முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு சேவை அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள செயலாளர் ஒருவரும் பணிக்குழுவும் அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.