அரசுகள் மாறினாலும் கொள்கைகள் நிலையானதாகவே இருக்கவேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசுகள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்குக் காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுக நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான கட்டமைப்பு, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
“நாட்டில் செயற்திறனான நிர்வாகத்தை ஸ்தாபிப்பதில் ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கும் வகையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
2017ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கை 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 7 வருடங்களின் பின்னர் இன்று இந்த தேசிய கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடுவது அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகக் குறிப்பிடலாம்.
தேசிய மதிப்பீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிதி அமைச்சு மற்றும் திட்ட முகாமைத்துவத் திணைக்களத்துக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அரச கொள்கைகளின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி, மூன்று மொழிகளிலும் இந்தப் புதிய கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அரசின் அதிக செலவீனங்களைக் கொண்ட பத்து அமைச்சுகளின் செலவுகள் குறித்த பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த வருட இறுதிக்குள் வெளிவிவகாரக் கொள்கை வரைவைத் தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக நீண்டகாலமாக அவதானத்தைப் பெற்றுவந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்படி அமைச்சின் செயற்பாடுகளை பின்பற்றி ஏனைய அமைச்சுக்களும் தேசிய கொள்கை கட்டமைப்பை பின்பற்ற வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அமைச்சுக்கள் மட்டத்தில் தேசிய கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவது அவசியமானது. அது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் உதவியாக அமையும்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் தேசிய மதிப்பீட்டுக் கொள்கையின் தேவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதனை நனவாக்க அர்ப்பணிப்புக்களை செய்த அனைவரையும் பாராட்டுகின்றேன்.
நிலையான தேசியக் கொள்கை இல்லாதது நாட்டின் ஆட்சி முறையில் காணப்படும் மிகப்பெரிய குறைப்பாடாகும். தேசியக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. இந்தக் கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.
அரச நடவடிக்கைகள் தொடர்பில் வலுவான மதிப்பீடு மிகவும் முக்கியமானது. தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை வலுவாக நடைமுறைப்படுத்த அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம்.
அரச சேவைக்குள் ஒழுக்கத்தையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குவதே இதன் மற்றுமொரு நோக்கமாகும். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான நிலையான சூழலை பேணவும் அரசுகள் மாறினாலும் நிலைக்கூடியதாக இந்த கொள்கைகள் அமைய வேண்டும்.
இலங்கை இந்தக் கொள்கையுடன் முன்னோக்கிச் செல்லும் போது, தேசியக் கொள்கைகள் தொடர்பில் அதிக இணக்கப்பாடு ஏற்படும் என்றும் அதன் பலனாக விரிவான தேசிய கொள்கை ஒன்றுக்காக வரைவு உருவாவதற்கு சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் நம்புகின்றோம்.
இந்த தேசிய கொள்கைகளுடன் முன்னோக்கி செல்லும் வழியை திட்டமிடும் தருணத்தில் கடன் நீடிப்பு தொடர்பான பேச்சுகளும் முன்னேற்கரமாக அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. இதன்போது, அரச நிதிக் குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க இணக்கப்பாடுகளை எட்டவும் முடிந்துள்ளது.” – என்றார்.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, செஹான் சேமசிங்க, லசந்த அழகியவண்ண, துறைசார் அமைச்சுக்களின் செயலாளர்கள், உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.