ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி முன் பாரத் என பெயர் பலகை
பல உலக நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும், ஜி20 உச்சி மாநாடு புது தில்லி பிரகதி அரங்கத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
புது தில்லியில் அமைந்துள்ள பிரகதி அரங்கில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. அரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் நாட்டின் பெயர் பலகையில் பாரத் என வைக்கப்பட்டுள்ளது.
மொராக்கோவில் நேரிட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு உச்சி மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று கூறினார்.
முன்னதாக, மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.
இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை காலை தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் தில்லி பிரகதி அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று காலை நேரில் வந்து ஆய்வு செய்தார். பிறகு, பாரத் மண்டபம் பகுதியிலும் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் வந்தார்.
இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் நடத்தவுள்ளார்.
சனிக்கிழமை இரவில் குடியரசுத் தலைவா் சாா்பில் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு தலைவா்கள் மரியாதை செலுத்தவுள்ளனா்.