உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : நடந்தது என்ன?
பிரிவினையால் திட்டம் சிதறியது! -01
உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாடு முழுவதும் இரத்த ஆறு ஓட வைப்பதுதான் சஹரானின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அது இயலாமல் போகிறது. சில கருத்து முரண்பாடுகளால் சஹரானின் குழு இரண்டாக உடைகிறது. அங்கிருந்தவர்களில் சிலர் சஹரானின் தலைமையை ஏற்காது இன்னொரு தலைவரை தேர்தெடுக்கிறார்கள்.
அடுத்த தலைவரை தேர்ந்தெடுந்தவரின் பின்னால் தற்கொலைதாரியாக இருந்த 6 -7 பேர் இருந்தார்கள். இதனால் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்க வைக்கும் சஹரானின் கனவு கலைந்து போகிறது. அந்த இரண்டாவது தலைவரும் இப்போது கைதாகி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளார்.
கடந்த தாக்குதல்கள் குறித்து மட்டுமல்ல அவர்களுக்கு தெரிந்த பெரும்பாலான தகவல்களை அடி முதல் நுனிவரை இப்போது கைதாகியுள்ளோர் கக்கி விட்டார்கள். அதனடிப்படையில் சஹரானின் அமைப்பினது வளர்ச்சிக்கு அனைத்து விதங்களிலும் உதவிய உள்நாட்டு – வெளிநாட்டு நபர்கள் முதல் நாடுகள் குறித்த தகவல்களையும் கைதானவர்கள் தெரிவித்துள்ளார்கள். தேசிய ரீதியாக பல வியாபாரிகள் பண உதவி செய்துள்ளார்கள். அவர்களில் தெமட்டகொடை இப்ராகிம் குடும்பத்தினர் முதன்மையானவர்களாக உள்ளனர்.
புலனாய்வு துறையினரது கணிப்பின் படி தற்கொலைதாரிகளில் அநேகர் இப்போது கைதாகியுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகளாக வெடித்து சிதற சத்தியப் பிரமாணம் செய்த காத்தான்குடியைச் சேர்ந்த 5 பேர் கூட தற்போது கைதாகி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை பகுதியிலுள்ள ஒரு முகாமில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள். தவிர இன்னும் 150 பேர் வரை கைதாக வேண்டியவர்கள் நாட்டுக்குள் உள்ளதாக குற்றவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அவர்கள் தற்கொலைதாரிகள் இல்லாவிடினும் சஹரானின் கடும் ஆதரவாளர்களாவார்கள். அத்தனைபேரும் சஹரானின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டவர்களாவார்கள்.
விசாரணைகளின் போது இறுதியாக தற்கொலைதாரிகளாவதற்கு மிஞ்சியவர்கள் தெமட்டகொடை இப்ராகிமின் குடும்பமும் , காத்தான்குடி மற்றும் கல்முனையைச் சேர்ந்த சஹரானின் குடும்பமும் மட்டுமேயாகும். அதில் அதிகமான பங்களிப்பு சஹரானின் குடும்பத்தாருடையதாகும்.
கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் இருந்த வீட்டில் இறந்து போன தற்கொலைதாரிகளில் அநேகர் சஹரானின் உறவினர்களாவார்கள். சஹரானின் தலைமையை ஏற்காமல் விலகி இரண்டாவது தலைமையை ஏற்றோரில் பெரும்பாலானவர்கள் மாவனல்ல மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.
துருக்கி நாட்டின் ஊடாக சிரியா சென்று IS பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சஹரானுக்கு IS தொடர்புகள் ஏற்பட்ட விதம் தொடர்பான அனைத்து விபரங்களும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.
நீர்கொழும்பு கட்டுவபிட்டியில் கிடைத்த தகவலொன்றால்தான் சம்மாந்துறை ஆயுத களஞ்சியம் கைப்பற்றப்பட்டது. கட்டுவபிட்டி புனித. செபஸ்தியார் தேவாலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஹஸ்த்து மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். திருமணத்தின் பின் இவரது மனைவியான புலஸ்தீனி ராஜேந்திரன் எனப்படும் சாராவின் கல்முனையிலுள்ள A.F.C. வீதியிலுள்ள வீட்டில்தான் குடியிருந்துள்ளார்கள். மனைவியான சாராவும் தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு தயாராகவே இருந்துள்ளார். சாரா இரண்டாவது தாக்குதலுக்காகவே காத்திருந்தார்.
கட்டுவபிட்டி கோயில் தாக்குதலை நடந்த கடந்த ஜனவரி மாதமே திட்டம் தீட்டியுள்ளார்கள். அந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள கட்டானை எனும் இடத்தின், டேவிட் பெரேரா மாவத்தையிலுள்ள வீடொன்றை கடந்த பெப்ரவரி மாதம் வாடகைக்கு இவர்கள் எடுத்துள்ளார்கள். அதன் வாடகை 45’000 ரூபாவாகும். முதலில் அங்குதான் வெடி மருந்துகள் உட்பட்ட உபகரணங்களை கொண்டு வந்து வைத்துள்ளார்கள். வான் மற்றும் லொறிகளில் ஒரு அறை நிறையக் கூடிய அளவு வெடி மருந்துகள் மற்றும் இரசாயண திரவங்களை பல முறைகளாக சந்தேகப்படாவண்ணம் கொண்டு வந்து வைத்திருந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 21ம் திகதி வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களை பாணதுறை கரிக்கமுல்லை எனும் இடத்திற்கு கொண்டு சென்றுதான் தயார் செய்துள்ளார்கள். கட்டுவபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு கட்டுவபிட்டியவில் எடுத்த வீட்டில் வைத்தே தயாரித்துள்ளார்கள். இரண்டாவது தாக்குதலுக்கான தற்கொலை குண்டுகள் குளியாப்பிட்டியில் உள்ள குண்டு தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் இதே வீட்டில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மிகுதி வெடி மருந்துகளை ஏப்ரல் 11ம் திகதி பாதுகாப்பாக வைக்க சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்துள்ளார்கள். நீர்கொழும்பிலிருந்து வாடகைக்கு எடுத்த லொறியோன்றில் , வீடு மாறுவது போல் வீட்டு பொருட்களோடு இந்த வெடி பொருட்களை சாய்ந்தமருது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
விட்டிலிருந்த பொருட்களை அனுப்பிய பின்னும் கூட , யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாதென , கட்டுவபிட்டிய தாக்குதல்தாரியின் மனைவி சாராவோடு சிலர் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கட்டானை வீட்டை விட்டு 18ம் திகதி வெளியேறியுள்ளனர். ஆனாலும் 20ம் திகதி மீண்டும் திரும்பிவரும் குண்டுதாரி 21ம் திகதி கட்டுவபிட்டி தேவாலயத்துக்கு தற்கொலை தாக்குதல் நடத்த இந்த வீட்டிலிருந்தே சென்றுள்ளார்.
தற்கொலை தாக்குதல்கள் நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த தற்கொலைதாரியை போலீசார் அடையாளம் கண்டு கொள்கின்றனர். புலனாய்வாளர்கள் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை கடும் தேடுதல்களின் பின் கண்டு பிடிக்கின்றனர். அதற்காக வீதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சீசீடீவி கமாரக்களை பரீட்சித்துள்ளனர். அதை வைத்து கண்டு பிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மூலம் அங்கிருந்து சென்றவர்களது தகவல்கள் மற்றும் சென்ற இடங்களை கண்டறிந்து கொள்கின்றனர்.
தடயங்களும் தேடல்களும் ! – 2
லொறியின் சாரதி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26ம் திகதி , அதிரடிப் படையினர் சம்மாந்துறை வீடுடொன்றை முற்றுயிடுகிறார்கள். அதன் பின் நிந்தாவூரில் மற்றொரு வீடொன்றையும் முற்றுகையிடுகிறார்கள். அங்கிருந்து வெடி பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்கள் பல கிடைக்கப் பெறுகின்றன. அத்தோடு குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் 1000க்கும் மேல் கண்டு பிடிக்கப்படுகின்றன. அவற்றைத் தவிர தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை தாக்கிய பின் , IS அமைப்பு அந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியதாக வீடியோவில் காட்டிய தற்கொலைதாரிகள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பின்னால் தெரிந்த IS பெனரும் கூட அங்கிருந்து கிடைக்கின்றன.
இந்த இரு வீடுகளும் தாக்குதலுக்கு முன்னரே வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த வீடுகளாகும். சம்மாந்துறையில் இருந்த வீடு , 30 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. நிந்தாவூர் வீடு , 20 ஆயிரம் மாதாந்த வாடகையாக பெறப்பட்டிருந்தது. அந்த இரு வீடுகளும் காத்தான்குடி வாசியான மொகமட் நிபாஸ் என்பவர் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. அவரும் ஒரு பயங்கரவாத தற்கொலைதாரியாகும்.
பயங்கரவாதிகள் 15 பேர் கல்முனை சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு செத்தார்கள் அல்லவா? அதற்கு முன் சஹரான் மற்றும் ஏனைய பயங்கரவாதிகள் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை தொடுக்கும் போது , சஹரானின் மனைவியான பாத்திமா காதியாவும் கட்டுவபிட்டி தேவாலய தற்கொலைதாரியின் மனைவியான சாராவும் , சஹரானின் சகோதரியும் , தாயும் , அவர்களது சிறு பிள்ளைகளும் திகாரி என்ற இடத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் தாக்குதல் நடத்த இரு தினங்களுக்கு முன்தான் , அங்கு சென்று மறைந்து இருந்துள்ளார்கள். அங்கு செல்வதற்காக , ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரது வானை பயன்படுத்தியுள்ளார்கள்.
10 நாட்களாக அந்த வானில் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.
கிரியுல்லையிலுள்ள கடையொன்றில் 29 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளை உடைகளை கொள்வனவு செய்யவும் அந்த வானில்தான் சென்றுள்ளார்கள். அங்கு உடைகளை வாங்கிய அன்றைய இரவே , திகாரி பிரதேசத்திலிருந்து கல்முனையை நோக்கி பயணமாகியிருக்கிறார்கள்.
தனது தலைவரின் மனைவி மற்றும் குடும்பத்தின் நெருக்கமானவர்கள் அங்கு வரும் போது , தங்குவதற்கான வீடொன்றை முகமது நிபாஸ் ஒழுங்கு செய்திருக்கிறார். அதற்காக நிந்தாவூரில் வாடகைக்கு வீடொன்று எடுக்கப்படுகிறது. அங்கிருந்துதான் ஏப்ரல் 26ம் திகதி , சாய்ந்தமருதிலுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டுக்கு இவர்கள் வருகிறார்கள். சாந்தமருது வீடு 4000 ரூபா வாடகைக்கு சில நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்தது.
மொகமட் நிபாஸ் , சஹரானின் இரு சகோதரர்களையும் , தகப்பனையும் சகோதரியின் கணவனையும் , அவர்களோடு வந்த சிலரையும் சாய்ந்தமருது வீட்டில் தங்க வைக்கிறார். சில பொதிகளோடு வந்த அவர்கள் , அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். அவர்களது நடத்தை அயலவர்களுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறது.
அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரரை நிறுத்தி அயலவர்கள் தமது சந்தேகத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொன்ன விபரத்தைக் கேட்டு , வீட்டுக்கு வந்திருப்போரை விசாரிக்கவென வீட்டு பகுதிக்குள் நுழையும் போலீஸ்காரர் மேல் , கூரையின் மேலிருந்து கைக் குண்டொன்று வீசப்படுகிறது. அந்தக் குண்டு , வீட்டுக் கூரையில் இருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்தே வீசப்படுகிறது.
குண்டு வீச்சில் , தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமில்லாமல் அந்த போலீஸ்காரர் தப்பிவிடுகிறார். அந்த குண்டு தாக்குதல் நடந்ததும் , உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு விடயத்தை அறிவிக்கிறார். வேகமாக வந்து அந்த இடத்தை போலீசாரும் இராணுவமும் முற்றுகையிடுகிறது. அவர்களது முற்றுகையோடு வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கி வேட்டுகள் சில கக்கத் தொடங்குகின்றன. இரு தரப்புகளிடையே துப்பாக்கி சமர் ஒன்று ஆரம்பமாகிறது.
இப்படி பலமுறை விட்டு விட்டு துப்பாக்கி சமர் நடக்கிறது. அதன்பின்தான் சில மணி நேரங்களுக்குள் 3 பாரிய குண்டுகள் தொடர்ந்து போல வீட்டுக்குள் இருந்து வெடிக்கின்றன. இராணுவமும் , போலீசாரும் வீட்டை சுற்றி இரவிரவா காத்து நின்றனரே தவிர , இரவு என்பதால் அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யவில்லை. இதற்குள் இன்னொரு பகுதி படையினரும் , போலீசாரும் சாய்ந்தமருதில் உள்ள ஏனைய வீடுகளை சுற்றி வளைத்து சோதனையிடுகிறார்கள்.
3 வெடி குண்டுகளை வெடித்த பின் வீட்டுக்குள், படையினரும் போலீசாரும் காலை விடிந்த பின்னர்தான் நுழைகிறார்கள். அவர்கள் நுழையும் போது முதலில் காண்பது , T 56 யை மார்போடு கையில் பிடித்தபடி , வீட்டு முற்றத்தில் துப்பாக்கி சூடு பட்டு இறந்து கிடந்த ஒருவரைத்தான். அவர்தான் நிபாஸ். போலீஸ்காரருக்கு முதலில் குண்டை வீசியவரது உடல், வீட்டு கூரையில் உயரிற்று கிடப்பதைக் காண்கிறார்கள். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் படையினரும், போலீசாரும் , ஒரே இடத்தில் குவியலாக சிறு குழந்தைகளோடு பலர் சிதறுண்டு இறந்திருப்பதையும் காண்கிறார்கள்.
அங்கு 14 பேரின் பிணங்கள் குவியலாக கிடக்கின்றன. சில உடல்கள் அடையாளம் காண முடியாபடி சிதைந்து போயிருக்கின்றன. இறந்து கிடந்தோரின் உடல் பாகங்கள் வீட்டின் எல்லா பாகங்களிலும் விசிறிக் கிடக்கின்றன. அந்தப் பிணக் குவியலில் , சஹரானின் இரு சகோதரர்களான முகமது செயின் ஹசீம் , முகமது ரில்வான் மற்றும் தந்தையின் உடல்களாக அடையாளம் காணுகிறார்கள். இந்திய புலனாய்வு துறையான, ரோ அமைப்பினர் கொடுத்த தற்கொலை தாக்குதல்தாரிகளின் பட்டியலில் , சஹரானின் சகோதரரான முகமது ரில்வானின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவர்களை தவிர சஹரானின் இளைய சகோதரி முகமது சய்ரா ஹசீம் மற்றும் அவரின் கணவர் முகமது ரிசாத் ஆகியோரது உடல்களும் அவற்றோடு இருப்பதை காண்கிறார்கள். இறந்து கிடந்தவர்களை அடையாளம் காண முயன்று கொண்டிருந்த வேளையில் , பக்கத்து அறையொன்றிலிருந்து முனங்கலும் அழுகையும் கேட்கிறது.
அங்கே ஒரு பெண்ணும் , ஒரு குழந்தையும் குண்டு வெடிப்பால் காயப்பட்டு இருப்பது தெரிகிறது. அவர்களை மீட்கும் படையினர் , உடனடியாக முதலுதவிகளை செய்து , அம்பியூலன்ஸ் இரண்டை வரவைழைத்து , அம்பாறை வைத்திசாலைக்கு போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே மீட்கப்பட்டவர்கள் வேறு யாருமல்ல , தற்கொலை செய்து கொண்ட பயங்கரவாதி சஹரானின் மனைவி மற்றும் அவரது மகளாகும். அதேவேளையில் , சஹரானின் 8 வயது மகனும் , இன்னும் 6 குழந்தைகளும் பயங்கரவாதிகளது தற்கொலைக் குண்டு வெடிப்பால் உயிரிழந்து கிடக்கிறார்கள்…….
தான் எதற்கு எனக் கேட்ட போது “முன்னால் தேவைப்படும். அதுதான் வாங்குகிறேன்” என சாரா தெரிவித்ததாக சஹரானின் மனைவி பாத்திமா அப்போது தெரிவித்துள்ளார். இன்று (15.05.2019) பாத்திமா குற்றப் புலனாய்வு துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிலவேளை அது குறித்த மேலதிக தகவல்களை அவர் இனிச் சொல்லலாம்?
நாம் நினைப்பது போல சஹரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் மட்டும்தான் அல்ஹாவை வணங்காதவர்களை கொலை செய்ய வேண்டும் என நாம் நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இவர்களை விட படு பயங்கரமாக உணர்ச்சிப் போதனைகளை செய்தோர் வேறு பல இஸ்லாமிய அமைப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் செய்த பிரசங்கங்கள் உள்ள வீடியோக்களையும் , ஆவணங்களையும் அவர்கள் அழித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது ஆயுதம் தூக்கவில்லையே தவிர “அல்ஹாவை ஏற்காதோரை கொல்ல வேண்டும் ” எனும் தீவிர எண்ணங்களை பரப்பியே வந்துள்ளார்கள். இப்போது அவர்களும் மௌனித்தது மாதிரி உள்ளார்கள். அந்த மௌனம் கூட பயங்கரமானதே!
– ஜீவன்
( இந்த கட்டுரை 2019.மே 13 முதல் 2019.மே 18 வரை முகப்புத்தகத்தில் தொடராக வெளியானதாகும்)